கேரளாவில்..
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், வல்லக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ்(45). இவரது மனைவி ஆஷிரா பீவி(39). இவர்களது மகன் முஹம்மது ஹசன்(19). கடந்த 16-ம் தேதி அப்பாஸ் வீட்டிற்குள் நான்கு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்தது. கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அப்பாஸை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில், கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அப்பாஸ் அனுமதிக்கப்பட்டார். அவரை ஆஷிரா பீவியும், முஹம்மது ஹசனும் கவனித்துக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, அப்பாஸை ஆட்களை ஏவி கொலை செய்ய முயன்றதாக தெரிய வந்தது. இதையடுத்து ஆஷிரா, முஹம்மது ஹசனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் தான், அப்பாஸை ஆட்களை ஏவி கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்,” அப்பாஸுக்கும், ஆஷிராவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஷிரா கோபித்துக் கொண்டு எர்ணாகுளத்தில் உள்ள தாய் வீட்டிற்கு மகனுடன் சென்றுள்ளார்.
அப்போது அப்பாஸ் தன்னை துன்புறுத்துவதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஷமீரிடம் ஆஷிரா கூறியுள்ளார். அப்போது அப்பாஸை கொலை செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 16-ம் தேதி ஷமீர் தனது கும்பலுடன் வல்லக்கடவு வந்த போது வீடடின் பின்பக்க கதவை ஆஷிரா திறந்துள்ளார். இதன் பின் வீட்டுக்குள் நுழைந்த ஷமீரும், அவரது கும்பலும் அப்பாஸை வெட்டியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஆஷிராவின் மகன் முஹம்மது ஹசனும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் தாயும், மகனும், ஷமீர் உள்ள்ளிட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றனர். குடும்பத் தகராறில் கணவனை கொலை செய்ய மனைவி, மகன் முயன்ற சம்பவம் இடுக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.