வேலூர்…

வேலூர் மாவட்டம் வேலப்பாடியை சேர்ந்தவர் குமாரவேல் (60). இவர் லாரி பழுதுபார்க்கும் கடையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோமதி (48). இவர் கூட்டுறவு வீடு கட்டும் கடன் சங்கத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு பிரியா (20) என்று ஒரு மகள் உள்ளார். இவர்கள் அப்பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் குமாரவேல் தினம் தோறும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல நேற்று இரவும் குடித்துவிட்டு அவர் வீட்டிற்கு தட்டுத்தடுமாறி வந்துள்ளார். முழு போதையில் இருந்த அவரால் நிற்கக்கூட முடியாமல் இருந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த குமாரவேல் மனைவி கோமதியை கத்தியால் கை மற்றும் கால்களில் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார். அதில் அலறி துடித்த கோமதி சட்டென விலகி கணவரிடமிருந்து கத்தியைப் பிடுங்கி கோபத்தில் தன் கணவன் குமரவேல் கழுத்தின் பின் பக்கமாக வெட்டி உள்ளார்.

அதில் குமரவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்தில் பலியானார். பின்னர் இந்த கொடூர சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

படுகாயமடைந்த மனைவி கோமதி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கணவன் குமரவேல் இன் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து மகள் பிரியா மற்றும் வீட்டின் உரிமையாளரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டு கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















