கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்று 19 வயதேயான இளம்பெண் ஒருவர் மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலைச் செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 19 வயசு பெண் என்பதால், காதல் தோல்வி,
வீட்டில் பெற்றோருடன் தகராறு என்று ஏதோதே எண்ணத்தில் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில், அப்போது தான் வாழ்க்கையைத் துவங்கியிருக்கும் புதுமணப்பெண், தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தாள்.

அதன் பின்னர் இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
போலீசாரின் விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த கெஞ்சம்மா. இவருக்கு வயது 19. கெஞ்சம்மாவுக்கும், சீதப்பா பசவராஜ்க்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது என்பது தெரிய வந்தது.

சீதப்பா எரிவாயு சிலிண்டர் சப்ளை செய்யும் பணிபுரிந்து வருகிறார். கெஞ்சம்மா அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். புதுமணத் தம்பதிகள் கடந்த 6 மாதங்களாக எச்ஆர்பிஆர் லே-அவுட்டில் வசித்து வந்தனர். திருமணமாகி 6 மாதங்கள் தான் ஆவதால் கெஞ்சம்மா தற்கொலை குறித்து சீதப்பா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

சீதப்பாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். போலீசாரின் கவனிப்பில் தீவிர விசாரணைக்குப் பின்னர், கெஞ்சம்மாவைக் கொலைச் செய்ததை ஒப்புக் கொண்டார்.
நேற்று அதிகாலை கெஞ்சம்மாவிற்கும், அவருக்கும் ஏற்பட்ட தகராறில் கெஞ்சம்மாவை கழுத்தை நெரித்து சீதப்பா கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இந்த கொலையை மறைக்க தூக்குப் போட்டு கெஞ்சம்மா தற்கொலை செய்தது போல மின்விசிறியில் சேலையைக் கட்டி அவரது உடலை தொங்க விட்டுள்ளார்.
இதனையடுத்து சீதப்பாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆனநிலையில் மனைவியை கொலை செய்தது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.















