கல்லூரி மாணவியுடன் இரவில் ஒதுங்கிய முதியவர்… புதருக்குள் காத்திருந்த அதிர்ச்சி!!

401

புதுச்சேரியில்..

புதுச்சேரி, வில்லியனூரை அடுத்திருக்கும் கணுவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். 55 வயதான இவர், அதே பகுதியில் மளிகைக்கடை ஒன்றை நடத்திவருகிறார்.

கடந்த 12-ம் தேதி கருணாகரனின் மளிகைக்கடைக்குச் சென்ற இளம்பெண் ஒருவர், தன் பெயரைச் சொல்லி, தனக்கு அப்பா, அம்மா இல்லை என்றும், உறவினர்கள் வீட்டில் வளர்ந்ததாகவும் கூறினார்.

அத்துடன் தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துவரும் தனக்கு, தங்குவதற்கு வாடகைக்கு ஒரு வீடும், பகுதி நேர வேலையும் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு, தன் வீட்டிலேயே முதல் மாடி காலியாக இருக்கிறது என்றும், “அங்கு நீ தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன்’’ என்றும் கூறியிருக்கிறார் கருணாகரன். அப்போது இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டிருக்கின்றனர்.


அன்று இரவே கருணாகரனுடன் செல்போனில் பேசிய மாணவி, `வயசானாலும் ரொம்ப அழகா, மேன்லியா இருக்கீங்க. ஆறுதலா, அக்கறையுடன் பேசுறீங்க’ என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு இருவரும் மணிக்கணக்கில் பேசிவந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி மாலை கருணாகரனுக்கு போன் செய்த அந்த மாணவி, “எனக்கு மனது சரியில்லை. எங்கேயாவது வெளியில் போகலாமா… உங்களுடன் தனியாக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

அதற்கு உடனே சரி என்று கூறிய கருணாகரன், அன்று இரவே மாணவியை வண்டியில் ஏற்றிக்கொண்டு, சங்கராபரணி ஆற்றின் கரைப் பகுதிக்குச் சென்றார். இருவரும் இருட்டாக இருந்த புதருக்குள் சென்றனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த மூன்று இளைஞர்கள், கருணாகரனையும் மாணவியையும் வீடியோ எடுத்திருக்கின்றனர்.

அதைப் பார்த்து அதிர்ந்துபோன இருவரும், “எங்களை ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்?’’ என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு அந்த இளைஞர்கள், “நீங்கள் இருவரும் இருட்டில் என்ன செய்கிறீர்கள்?” என்று மிரட்டிருக்கின்றனர்.

அப்போது, ”இந்தப் பெண் படிப்பதற்கு உதவி கேட்டார். அதற்காக அழைத்து வந்தேன்” என்று கூறியிருக்கிறார். உடனே “இருட்டில்தான் உதவி செய்வாயா?” என்று அவரை மிரட்டிய அந்த நபர்கள், “இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடு. இல்லையென்றால் நீ நிர்வாணமாக இருக்கும் வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பிவிடுவோம்” என்று மிரட்டியிருக்கின்றனர்.

அதில் பயந்துபோன கருணாகரன், தன்னிடமிருந்த 40,000 ரூபாயையும், `கூகுள் பே’ மூலமாக 75,000 ரூபாயையும் அவர்களுக்கு அனுப்பியிருக்கிறார்.

அந்தப் பணம் பத்தாது என்று அவர்கள் கூறியதும், வில்லியனூருக்கு வந்த கருணாகரன் மாணவியை வீட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பிவைத்துவிட்டார். அதன் பிறகு தனக்குத் தெரிந்த கடையில் 30,000 ரூபாயை வாங்கி அவர்களுக்கு கொடுத்துவிட்டு, வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

அதையடுத்து மாணவிக்கு கருணாகரன் தொடர்ச்சியாக போன் செய்திருக்கிறார். ஆனால் அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

அந்தப் பெண் விபரீதமான முடிவை எடுத்திருப்பாரோ என்று பயந்துபோன கருணாகரன், வில்லியனூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். தொடர்ந்து கருணாகரன் பணம் அனுப்பிய `கூகுள் பே’ எண்ணை ஆய்வு செய்தபோது, அது கணுவாப்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருடையது என்பது தெரியவந்தது.

அவரை வளைத்துப் பிடித்த போலீஸார், அவர் கொடுத்த தகவலின்படி ராமு என்பவரையும் பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலம் வழக்கின் போக்கையே மாற்றியது. அது குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “மளிகைக்கடை நடத்திவந்த கருணாகரன், பெண்கள் விஷயத்தில் `வீக்’கானவராக இருந்திருக்கிறார்.

அதைத் தெரிந்துகொண்ட பிரகாஷும் ராமுவும் அதைவைத்தே கருணாகரனிடம் பணம் பறிக்க நினைத்திருக்கின்றனர். ராமுவின் மனைவி தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு படித்துவருகிறார். அவருடன் படித்த ஒரு மாணவி ஏழ்மை நிலையில் இருந்திருக்கிறார்.

அவருக்கு உதவி செய்வதாகச் சொன்ன பிரகாஷும் ராமுவும், கருணாகரனிடம் ஆசையாகப் பேசி சபலத்தைத் தூண்டுமாறு அசைன்மென்ட் கொடுத்திருக்கின்றனர்.

அவரும் அப்படியே பேசிவந்த நிலையில், 19-ம் தேதி கருணாகரனைத் தனியாக அழைத்துவரும்படி கூறியிருக்கின்றனர் பிரகாஷும் ராமுவும். அதன்படி 19-ம் தேதி தனியாக இருக்க வேண்டும் என்று மாணவி அழைத்ததும், மெடிக்கல் ஒன்றுக்குச் சென்றுவிட்டு, ஒதுங்குவதற்குப் புதர்களைத் தேடியிருக்கிறார்.

சுமார் இரண்டரை மணி நேரம் இடம் தேடிய நிலையில், பிரகாஷ் முன்பே கூறியிருந்த இடத்தைக் காட்டி, `அங்கே செல்லலாம். யாரும் இல்லை’ என்று கூறியிருக்கிறார் மாணவி. அதையடுத்து இருவரும் அங்கே சென்றிருக்கின்றனர்.

அங்கு ஏற்கெனவே மறைந்துகொண்டிருந்த பிரகாஷ், ராமு, அருண் மூவரும் அரை நிர்வாணத்தில் இருந்த கருணாகரனை வீடியோ எடுத்தபடியே வெளியே வந்திருக்கின்றனர். இது கருணாகரனுக்கான ஸ்கெட்ச் என்பதால் மாணவியை மாஸ்க் அணிந்துகொள்ளும்படி முன்பே அலர்ட் செய்திருக்கின்றனர்.

அதன் பிறகுதான் கருணாகரனை மிரட்டிப் பணம் பறித்திருக்கின்றனர். வெளியில் சொன்னால் வீடியோவைப் பரப்பிவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியதால், அமைதியாக இருந்திருக்கிறார் கருணாகரன். அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டிருப்பாரோ என்ற சந்தேகத்தில்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார் கருணாகரன்.

அதுவரை நடந்த சம்பவத்துக்கும், அந்தப் பெண்ணுக்கும் தொடர்பு இல்லை என்றுதான் நினைத்திருக்கிறார் அவர். இப்போது பிரகாஷையும் ராமுவையும் கைதுசெய்துவிட்டோம். மாணவியையும், ராமுவின் மனைவியையும், அருண் என்பவரையும் தேடிவருகிறோம்” என்றனர்.