கள்ளக்காதலியின் கணவனுக்கு காதலனால் அரங்கேறிய கொடூரம்!!

2456

திருச்சி…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு சௌந்தரவல்லி என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். இரண்டு மகள்கள் வேலைக்கு செல்லும் நிலையில், ஒரு மகள் படித்துக் கொண்டிருக்கிறார்.

செளந்தரவல்லியை, சரவணன் காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன்பு திருவெறும்பூர் பகுதியில் உள்ள பந்தல் நிறுவனத்தில் செளந்தரவல்லி பணிக்கு சேர்ந்துள்ளார்.

அப்போது, அங்கு மேலாளராக பணிபுரிந்த ராதாகிருஷ்ணன் (வயசு 52) என்பவருடன் செளந்தரவல்லிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, அந்த நிறுவனத்தின் மாடியிலேயே தனியாக வசித்து வந்த ராதாகிருஷ்ணனுக்கும், செளந்தரவல்லிக்கும் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் கள்ளத் தொடர்பாக மாறியுள்ளது.


இந்த விஷயம் சரவணனுக்கு தெரிய வர, சௌந்தரவல்லியையும், ராதா கிருஷ்ணனையும் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

பிரச்னை பூதாகரமாகவே, கடந்த வாரம் சௌந்தரவல்லி தனது கடைசி மகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார்.வீட்டில் தனியாக இருந்த சரவணனை சமாதானப்படுத்தும் நோக்குடன், ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.போதை தலைக்கேறிய நிலையில், மனைவியுடனான கள்ளத் தொடர்பை கைவிடுமாறு, ராதாகிருஷ்ணனை சரவணன் எச்சரித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், சரவணன் தலையை பிடித்து சுவரில் முட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தார்.

சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரவணன் குறித்து, தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, சரவணனை கொலை செய்த ராதாகிருஷ்ணன், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் மீது வழக்குப் பதிவுச் செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய சௌந்தரவல்லியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.