தமிழகத்தில்..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஜீவா நகர் சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துசுடலி (36). இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முத்துசுடலிக்கும் வேறு ஒரு இளைஞருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தியதில் முத்துசுடலி மீண்டும் கர்ப்பம் ஆனார்.

அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் 18ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குடும்பத்தின் வறுமை சூழல், கள்ளக்காதலால் ஏற்பட்ட குழந்தை ,
இந்த குழந்தையை வளர்த்தால் ஊர் உலகம் என்ன பேசுமோ என்ற எண்ணம் முத்துசுடலி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் குழந்தையை கொன்றுவிடலாம் என நினைத்துள்ளார். பிறகு அந்த முடிவை கைவிட்டுவிட்டு கள்ளக்காதலன், உறவினர்கள் என யாருக்கும் தெரியாமல் குழந்தையை யாருக்காவது விற்றுவிட நினைத்துள்ளார்.

இதை சேத்தூரை அடுத்த முகவூரை சேர்ந்த பன்னீர் செல்வத்தின் மனைவி ராஜேஸ்வரியிடம் (54) கூறினார். அவர், தென்காசி மாவட்டம் பெரும்பத்தூரை சேர்ந்த புரோக்கர் ஜெயபால், ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த செல்வி (30) ஆகியோர் மூலம் ஈரோட்டை சேர்ந்த தம்பிராஜன் மனைவி அசினாவுக்கு அந்த குழந்தையை கடந்த மாதம் 25 ஆம் தேதி அதாவது குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் விற்றுள்ளார்.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த முத்துசுடலிக்கு திடீரென உடல்நல குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தாய்ப்பால் கொடுக்காததால்தான் இந்த உடல்நல பாதிப்பு ஏற்பட்டது என கூறியிருந்தனர்.
இதனால் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் செவிலியர்களும் குழந்தை எங்கே என கேட்டுள்ளனர்.

அதற்கு முதலில் ஏதேதோ சாக்கு போக்குகளை சொன்ன முத்துசுடலி, ஒரு கட்டத்தில் தனது குழந்தையை விற்றுவிட்டதாக தெரிவித்தார். உடனே குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர் திருப்பதிக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் கொடுத்தனர். அவர் முத்துசுடலியிடம் விசாரணைநடத்திய போதுதான் குழந்தையை ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு விற்றது உறுதியானது.

இதுகுறித்து திருப்பதி மற்றும் விருதுநகர் உதவி மைய மேற்பார்வையாளர் விஸ்வநாதன் ஆகியோர் சேத்தூர் போலீஸில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் முத்துசுடலியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் குழந்தையை வளர்க்க தனக்கு விருப்பம் இல்லை என்றும் அதை 3.5 லட்சத்திற்கு விற்றதும் அம்பலம் ஆனது.
அந்த பணத்தில் 2 லட்சத்தை முத்துசுடலி எடுத்துக் கொண்டதாகவும் மீதமுள்ள ஒன்றரை லட்சத்தை புரோக்கர் உள்ளிட்டோருக்கு கொடுத்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து முத்துசுடலியை கைது செய்த போலீஸார் அவர் கொடுத்த தகவல்களை வைத்து முகவூர் ராஜேஸ்வரி, நாமக்கல் செல்வி, குழந்தையை வாங்கிய அசினா ஆகியோரை கைது செய்தனர். இதில் புரோக்கர் ஜெயப்பால் தலைமறைவாக உள்ளார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.















