கள்ளக்காதல் விபரீதம்.. கணவனுக்கு கூலிப்படையை ஏவிய மனைவி : நடந்த விபரீதம்!!

1046

தூத்துக்குடி…

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி(32). இவருக்கும் புனித அனி எப்சிபா (29) என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அழகு சுந்தரபாண்டி விவசாயம் செய்து வருகிறார். இதற்காக, அழகு சுந்தரபாண்டி குடும்பத்துடன் புதூர் அருகே உள்ள சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், புனித அனி எப்சிபாவுக்கும் கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் மாரிராஜ் (31) என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி நாகலாபுரம் சென்றிருந்த அழகு சுந்தரபாண்டி இரவில் சின்னவநாயக்கன்பட்டி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது மறைந்திருந்த நான்கு பேர்,


அரிவாளுடன் அழகு சுந்தரபாண்டியை திடீரென சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், காயமடைந்த அழகு சுந்தரபாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புனித அனி எப்சிபாவிற்கும் மாரிராஜூக்கும் தகாத தொடர்பு இருந்ததாகவும்,

இதற்கு இடையூறாக இருந்த அழகு சுந்தரபாண்டியை கொலை செய்வதற்காக புனித அனி எப்சிபா, மாரிராஜ் மற்றும் அவரது நண்பர் கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

அழகு சுந்தரபாண்டியை கொலை செய்வதற்காக மதுரையில் இருந்து கூலிப்படையினரை வரவழைத்து ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் பேரம் பேசி இருக்கிறார்கள். இதில், முதல் தவணையாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து புனித அனி எப்சிபா மற்றும் உடந்தையாக இருந்த கள்ளக்காதலன் மாரிராஜ், சரவணன் ஆகிய மூன்று பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிந்த நிலையில், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கூலிப்படையை சேர்ந்த நபர்களை சங்கரலிங்கபுரம் போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதலால் கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற மனைவியின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.