காட்டிக்கொடுத்த மீசை! காதலி வீட்டின் பின்புறத்தில் தோண்ட தோண்ட காத்திருந்த அதிர்ச்சி!!

554

தி.நகர்…….

தி.நகர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையரின் மீசையை துப்பாக வைத்து அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தி. நகர் மூசா தெருவில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் கடந்த மாதம் சுமார் ரூ 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையர்களில் ஒருவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷ், அவரது கூட்டாளி அப்பு என்கிற வெங்கடேஷன், அமல்ராஜ் மற்றும் சுரேஷின் காதலி கங்காதேவி என்பது தெரியவந்தது.


இதனை அடுத்து கங்காதேவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது வீட்டின் பின்புறத்தில் மண்ணுக்குள் நகைகளை புதைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.

தி.நகர் கொள்ளை சம்பவம் நடந்த மூசா தெருவில் தொடங்கி திருவள்ளூர் புட்லூர் வரை சுமார் 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.

நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் முகக்கவசத்தை ஒரு சில நொடிகள் அகற்றிவிட்டு மீண்டும் மாட்டும் காட்சி பதிவாகியிருந்தது.

அப்போது அவரது மீசை வெளியே தெரிந்தது. அதை பழைய கொள்ளையர்களின் படங்களுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, அது கோடம்பாக்கம் மார்க்கெட் சுரேஷ் என்பது தெரியவந்தது. இதன் பின்னர் தொடர்புடைய குற்றவாளிகளையும் போலீஸார் அடுத்து அடுத்து கைது செய்துள்ளனர்.