காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே கல்லூரி மாணவி விபரீத முடிவு!!

352

காதலனுடன் வீடியோ காலில் பேசிகொண்டே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் தர்ஷினி (18). விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்த தர்ஷினி,

விருத்தாசலம் ஜங்ஷன் சாலை பேருந்து நிலையம் அருகே செல்போன் விற்பனை கடை ஒன்றில் பகுதி நேர ஊழியராகவும் பணி புரிந்து வந்தார்.

கல்லூரி மாணவி தர்ஷினி வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று செல்போன் கடையில் தர்ஷினி பணியில் இருந்த போது, தனது காதலனுடன் செல்போன் மூலம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதில், காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே கடையின் பின்புறமாக சென்ற தர்ஷினி, அங்குள்ள ஒரு அறையில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை வீடியோ காலில் பார்த்துக் கொண்டே இருந்த அந்த வாலிபர் இணைப்பை துண்டித்துவிட்டு, உடனடியாக கடையில் இருந்த ஊழியர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.


இதைகேட்டு பதறிய ஊழியர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது தர்ஷினி தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இது குறித்து உடனடியாக விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்ஷினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.