காதலியை கொலை செய்து காதலி குரலில் பேசி 2 வருடங்களாக ஏமாற்றிய போலீஸ்காரர்!!

175

உத்தரப்பிரதேசம்….

வேறு ஒருவரின் குரலை எடிட் செய்து, தான் காதலித்த பெண்ணின் பெற்றோருக்கு அனுப்பி, அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பவைத்த போலீஸ்காரர் பிடிபட்டிருக்கிறார். டெல்லியில் கான்ஸ்டபிளாக இருப்பவர் சுரேந்திரா ராணா (42).

இவருக்குத் திருமணாகி 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். 2014-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மோனா என்ற பெண், டெல்லி போலீஸில் கான்ஸ்டபிளாக வேலையில் சேர்ந்தார். அவர் சுரேந்திராவுக்குக்கீழ் வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பழகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சுரேந்திரா, பெண் கான்ஸ்டபிள்மீது காதல் வசப்பட்டார். தனது காதலை மோனாவிடம் சுரேந்திரா சொன்னபோது, மோனா அதை நிராகரித்துவிட்டார். ஆனாலும் சுரேந்திராவால் மோனாவை மறக்க முடியவில்லை.


திடீரென மோனாவுக்கு உத்தரப்பிரதேசத்தில் சப் இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது. இதனால் டெல்லி போலீஸ் வேலையை மோனா ராஜினாமா செய்தார். பின்னர் சப் இன்ஸ்பெக்டர் வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு, டெல்லியில் தங்கியிருந்து யூ.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.

அப்படியிருந்தும் சுரேந்திரா, மோனாவைப் பின்தொடர்ந்தார். இது குறித்து மோனாவிடம் மீண்டும் சுரேந்திரா பேசியபோது, காதலிக்க முடியாது என்று மோனா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். 2021-ம் ஆண்டு, செப்டம்பர் 21-ம் தேதி இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

மோனாவை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்ற சுரேந்திரா, அங்கு வைத்து மோனாவைக் கழுத்தை நெரித்துக் கொலைசெய்து, உடலை அங்கிருந்த சாக்கடையில் போட்டுவிட்டார். அதோடு உடல்மீது ஏராளமான கற்களைப் போட்டு மறைத்துவிட்டார்.

ஆனால் மோனா தொடர்ந்து உயிருடன் இருப்பதாக, அவரின் குடும்பத்தை நம்பவைத்துக்கொண்டிருந்தார். மோனாவின் மொபைல் போனில் அவரின் பெற்றோரைத் தொடர்புகொண்டு குரலை மாற்றி, தான் அரவிந்த் என்பவருடன் சென்றுவிட்டதாகக் கூறி, அவர்களை சுரேந்திரா நம்பவைத்தார். மோனாவின் பெற்றோர் டெல்லிக்கு இது குறித்துப் புகார் கொடுக்க வந்தபோது, அவர்களுடன் சேர்ந்து சுரேந்திராவும் புகார் கொடுக்கச் சென்றார்.

அதோடு பெண் ஒருவருக்கு கொரோனா ஊசி போட்டு அதற்கான சான்றிதழை மோனா பெயரில் வாங்கி, மோனாவின் பெற்றோருக்கு மோனாவின் மொபைல் மூலம் அனுப்பிவைத்தார். மோனாவின் வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டைக்கூட சுரேந்திரா பயன்படுத்தி, மோனா இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பவைத்தார்.

மோனா குறித்துத் தகவல் கிடைத்திருப்பதாகக் கூறி, மோனாவின் உறவினர்களுடன் சுரேந்திரா ஐந்து மாநிலங்களில் பல இடங்களுக்குச் சென்று வந்தார். அரவிந்த் என்ற நபருக்கு உயிர் கொடுப்பதற்காக சுரேந்திரா தன்னுடைய மைத்துனர் ராபின் என்பவரைப் பயன்படுத்திக்கொண்டார்.

ராபின், மோனாவின் குடும்பத்துக்கு போன் செய்து தானும் மோனாவும் திருமணம் செய்துகொண்டு குர்காவில் வசிப்பதாகவும், இப்போது பஞ்சாப்புக்குச் சென்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

10 நாள்களில் திரும்ப வந்துவிடுவதாகவும் தெரிவித்தார். மோனாவை பேசச் சொல்லும்படி மோனாவின் பெற்றோர் சொன்னதற்கு, `நீங்கள் கோபத்தில் இருப்பீர்கள் என்பதால், உங்களுடன் பேச பயப்படுகிறார்’ எனக் கூறினார்.

தான் சொன்னதை நம்பவைக்க வேண்டும் என்பதற்காக ராபின் ஹரியானா, டேஹ்ராடூன், ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் சென்று ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கினார்.

அந்த ஹோட்டல்களில் மோனாவின் ஆவணங்களை விட்டுவிட்டு வந்தார். இது குறித்து டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் ரவீந்திர யாதவ், ”மோனா திரும்ப பெற்றோரிடம் செல்ல விரும்பவில்லை என்பதை நிரூபிக்க, அவரின் ஆவணங்களை ராபின் ஹோட்டல்களில் விட்டுவிட்டு வந்திருந்தார்.

குற்றவாளி பல பதிவுசெய்யப்பட்ட ஆடியோவை மோனாவின் குரல் போன்று எடிட் செய்து மோனாவின் பெற்றோருக்கு அனுப்பிவைத்தான். மோனாவின் குடும்பத்துடன் ராபின் பேச பயன்படுத்தும் நம்பரை கண்காணிக்க ஆரம்பித்தோம். இதில் அந்த நம்பர் ராஜ்பால் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.

அவரைப் பிடித்து விசாரித்தபோது, இதில் பல உண்மைகள் தெரியவந்தன. மோனாவின் உடலை மறைக்க ராஜ்பாலும் உதவி செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. ராஜ்பால், சுரேந்திரா, ராபின் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.

இதில் மோனாவின் சகோதரி பூர்ணிமாதான் தன் சகோதரியைத் தேடி ஐந்து மாநிலங்களுக்கு அலைந்தார். அவர் ஹைதராபாத்தில் ஆசிரியராக வேலை செய்துகொண்டிருந்தார். தன்னுடைய சகோதரியைத் தேடி ஐந்து மாநிலங்களில் அலைந்ததால், அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது.

இதனால் அவரின் கணவர் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அப்படியிருந்தும் நம்பிக்கையைக் கைவிடாமல், குற்றவாளியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் பூர்ணிமா முக்கியப் பங்கு வகித்தார். இது குறித்து பூர்ணிமா கூறுகையில், “மோனா ஐ.பி.எஸ் அதிகாரியாக வர வேண்டும் என்று கனவு கண்டார்” என்று தெரிவித்தார்.