தென்காசியில்…

தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி, குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதன் பெயரில் அந்த பெண்ணின் தந்தை, தாய் மற்றும் உறவினர் என 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் அடுத்து ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் கிருத்திகா பட்டேலின் தந்தை நவீன் பட்டேல், தாய் தர்மிஸ்தா பட்டேல், இரண்டாம் கணவர் மைத்திரிக், உறவினர்களான விஷால், கீர்த்தி பட்டேல் மற்றும் சண்முகராஜ் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மீண்டும் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், தொடர்ந்து முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு வருவதால் வழக்கின் தற்போதைய நிலவரங்கள் என்ன என்பது குறித்து கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் கிருத்திகா பட்டேலிடம் நேரில் வரவழைத்து விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே, கிருத்திகா பட்டேலை நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

நீதிமன்றத்தில் தொடர் விசாரணையின் போது, இந்த வழக்கை பொறுத்தவரை சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறி இளம் பெண்ணின் தந்தை, தாய் இரண்டாவது கணவர் மற்றும் உறவினர்களின் முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் மனுதாரர்களை காவல் துறையினர் தேவைப்பட்டால் கைது செய்து விசாரணை செய்யலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் கிருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த நவீன் பட்டேல் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருவனந்தபுரம் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.















