
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் மாவட்டம் மொய்னாபாத் அடுத்துள்ள கெய்திரெடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கொட்டிக சாந்தைய இவருக்கு திருமணமாகி வெங்கடம்மா மற்றும் மல்லம்மா என இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் வெங்கட்டமாவிற்கு இரண்டு மகள்கள் மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இதில் பெரிய மகளுக்கு திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இரண்டாவது மகள் சொப்னா சட்டம் படித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றி வரும் நிலையில் மகன் ராஜு எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாந்தையை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் ராஜு தந்தைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை விற்று தொழில் செய்யலாம் என முடிவு செய்திருக்கிறார்.
ஆனால் சொப்னா அந்த நிலத்தில் பங்கு கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதை அவரது தாய் சமாதானம் செய்து வைத்த நிலையில் ராஜுவிற்கு 6 ஏக்கர் நிலத்தையும் மகள் சொப்னாவிற்கு நான்கு ஏக்கர் நிலத்தையும் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜு மொத்த நிலத்தையும் தனக்கு சொந்தமாக்கி கொள்ள நினைத்து தங்கை சொப்னாவை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார்.
அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொப்னா வேலைக்கு செல்லும் வழியில் அவரது வாகனத்தை டிராக்டர் வைத்து இடித்து விபத்து ஏற்படுத்தியிருக்கிறார்.
இதில் சொப்னாவிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார். இதை தொடர்ந்து சொப்னா மோய்னாபாத் காவல் நிலையத்தில் அவரது அண்ணன் குறித்து புகாரளித்தார்.
இருப்பினும் காவல்துறையினர் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சொப்னா தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவதற்காக இரண்டு தினங்களுக்கு முன்பு தாய் வெங்கட்டமாவுடன் நிலத்தை அளவெடுக்க சென்றிருக்கிறார்.
இதை அறிந்து ஆத்திரமடைந்த ராஜு தனது நண்பர்கள் சிலருடன் நிலத்திற்கு சென்று அவரது தங்கை சொப்னாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் சொப்னாவின் மீது காரை ஏற்றியும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சொப்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ராஜு மற்றும் அவரது நண்பர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையில் முதல் முறை சொப்னா புகாரளித்த போது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது என சொப்னாவுடன் பணியாற்றும் சக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.















