காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பெண்.. கொதித்தெழுந்த கிராம மக்கள்.. நடந்தது என்ன?

416

புதுச்சேரியில்..

புதுச்சேரி பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்த மீனவர் சந்திரன், இவரது மனைவி கலைச்செல்வி (24). அதே பகுதியை சேர்ந்த எழுமலை என்பவருக்கு சந்திரன் ரூபாய் 5 லட்சம் கடன் கொடுத்துள்ளார், கொடுத்த கடனை சந்திரன் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில்,

வாங்கிய கடனை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் எழுமலை . இந்த நிலையில், சந்திரன் தம்பதியினருக்கு பணம் அவசரமாக தேவைப்பட்டதால் கடன் கொடுத்த எழுமலையிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பணம் பெற்ற எழுமலை காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்த இரு தரப்பினரையுமே போலீசார் காவல் நிலையம் அழைத்திருந்தனர்.

சந்திரன் தனது மனைவி கலைச்செல்வியுடன் காவல் நிலையத்துக்கு சென்றபோது அங்கு பணம் வாங்கிய ஏழுமலையை போலீசார் நாற்காலியில் அமர வைத்தும் சந்திரன் மற்றும் அவரது மனைவியை நிற்கவைத்தும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.


இதில் ஆத்திரம் அடைந்த கலைச்செல்வி காவல் நிலைய வாயலில் நின்று கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த தீ ஆனது அவரின் உடல் முழுவதும் மளமளவென பரவியது.

இதனால் அலறியபடி அங்கேயே கலைச்செல்வி மயங்கி விழுந்தார்.இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து தீக்காயங்கள் உடன் இருந்த கலைச்செல்வியை ஆம்புலன்ஸ் மூலமாக கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீ விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவரை மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம் குறித்த தகவல் அறிந்து வந்த சந்திரன் கலைச்செல்வி தம்பதியினரின் உறவினர்கள் காலாப்பட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து காவல் நிலையம் அமைந்துள்ள புதுச்சேரி-சென்னை கிழக்குக்கடற்கரை சாலையில் வாகனங்களை மறித்தும், சாலையில் அமர்ந்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களிடையே சமதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போக செய்தனர்.

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் தீயிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் ஜிப்மர் அனுமதிக்கப்பட்ட சந்திரன் மனைவி கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.