குடும்பத்தகராறில் மனைவியின் தம்பியை குத்திக்கொன்ற சுமைத்தூக்கும் தொழிலாளி!!

587

திருவண்ணாமலையில்…

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி விஜயா.

இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். பாண்டியனின் மூத்த மகள் சுகுணாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராம்ஜி (30) என்பவருடன் திருமணம் நடைபெற்று மாமனார் வீட்டோடு வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ராம்ஜி திருவண்ணாமலையில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலையும் சுகுணாவிற்கும் அவரது கணவர் ராம்ஜிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாகவும். இதனை சுகுணாவின் தாயார் விஜயா தட்டி கேட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ராம்ஜி மாமியார் விஜயாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.


இதுகுறித்து தகவல்அறிந்த விஜயாவின் மகன் பரணி (23) வீட்டிற்கு வந்து ராம்ஜியிடம் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ராம்ஜி பரணியை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த பரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ராம்ஜியை தடுக்க வந்த பரணியின் தாய் விஜயாவையும், சகோதரி கல்கியையும் அவர் கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில் அவர்கள் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விஜயாவின் வீட்டிற்கு விரைந்து வருவதற்குள் அங்கிருந்து ராம்ஜி தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரணியின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மாமியார் விஜயா மற்றும் மனைவியின் சகோதரி கல்கி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் உதவியோடு மீட்ட போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நகர காவல் துறையினர் தப்பி ஓடிய சுமை தூக்கும் தொழிலாளி ராம்ஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.