திருச்சி…..

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பகுதியில் அரியாலம்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கக்கூடிய 43 வயதான சந்திரபோஸ் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

இவரின் மனைவி மஞ்சுளா ஊர்காவல் படையில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு எட்டு வயதில் ஹேமேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மஞ்சுளாவிற்குச் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன் காரணமாக வேலைக்குச் செல்லாமல் தாளக்குடியில் உள்ள அவரது தாயின் வீட்டில் ஒரு மாத காலமாகத் தங்கி உள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மஞ்சுளா தனது தாய் வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் கலைஞர் மகளிர் உரிமத்தொகை விண்ணப்பிக்க அரியானம்பேட்டை வந்துள்ளார். இவரைத் தேடிக் கொண்டு அவரது தாய் அன்னக்கிளி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு மஞ்சுளாவை அவர் அழைத்துள்ளார். சிகிச்சைக்கு அழைத்த தாய், மாமனார், மாமியார் ஆகியோருடன் சண்டை போட்டு மஞ்சுளா வர மறுத்துள்ளார்.

இதன் காரணமாக அன்று இரவு தாய்க்கும் மகளுக்கும் மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த மகள் மஞ்சுளாவின் தலையின் மீது அருகே இருந்த கல்லைப் போட்டுள்ளார். இதில் தலை சிதைந்து மஞ்சுளா துடி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன் பின்னர் அன்னக்கிளி தொட்டியம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் அலுவலர்கள் மஞ்சுளாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இதுகுறித்து தொட்டியம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சரணடைந்த அன்னக்கிளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.















