புனேவில்..

வெளிநாட்டு வேலை மோகம் மக்களிடம் எப்போதும் குறைவதில்லை. பணம் கொடுத்தாவது வெளிநாட்டு வேலைக்குச் சென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். அப்படி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்கள், சில நேரங்களில் கடுமையான சித்ரவதையை அனுபவிக்கின்றனர்.

புனேயைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வீட்டு வேலை என்று கூறி சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மும்பை மாகிம் பகுதியில் டிராவல் ஏஜென்சி நடத்திவந்த மொகமத் பயாஸ் என்பவரும்,
அவரின் கூட்டாளிகளும் அந்தப் பெண்களை வேலைக்கு அனுப்பிவைத்தனர். சுற்றுலா விசா எடுத்து அனுப்பிவைக்கப்பட்ட இரண்டு பெண்களும் சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்காக நியமிக்கப்பட்டனர்.

ஆனால், அந்தப் பெண்களை அவர்கள் வேலை பார்த்த வீட்டு உரிமையாளர்கள் கடுமையாக அடித்து, சித்ரவதை செய்தனர். சம்பளமும் மிகவும் சொற்ப அளவு மட்டுமே கொடுக்கப்பட்டது. சித்ரவதை தாங்க முடியாமல் உள்ளூர் ஏஜென்ட்டுகளிடம் இரண்டு பெண்களும் புகார் செய்தனர்.
ஆனால் இரண்டு பேரும் தலா 4 லட்சம் கொடுத்தால்தான் திரும்பிச் செல்ல முடியும் என்றும், இரண்டு பேரும் தலா 4 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்றும் உள்ளூர் ஏஜென்ட் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்கள் மகாராஷ்டிரா மனித உரிமை கமிஷனை அணுகினர். மனித உரிமை கமிஷன் உடனே இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தது.
உடனே இரண்டு பெண்களும் மீட்கப்பட்டனர். அவர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு தங்களை வெளிநாட்டில் விற்பனை செய்த ஏஜென்ட்டுக்கு எதிராக போலீஸில் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் புனே போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி அமோல் ஜண்டே கூறுகையில், “மும்பையிலுள்ள ஓசிவாரா என்ற இடத்தில் ரெய்டு நடத்தி மொகமத் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
அவரின் கூட்டாளிகள் நான்கு பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடிவருகிறோம். மேலும் ஒரு பெண் இதே போன்று தன்னையும் வெளிநாட்டில் விற்பனை செய்துவிட்டதாகப் புகார் செய்திருக்கிறார். அது குறித்தும் விசாரித்துவருகிறோம்” என்றார்.















