சித்தப்பா திருமணத்துக்கு மகள் கொடுத்த கிஃப்ட்… அசந்துபோன உறவினர்கள்!!

11045

கோவை…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்க மித்ரா. ஏழாம் வகுப்பு படித்து வரும் இவர் கொரோனா காலத்தில் விடுமுறையின் போது தனக்கு கிடைத்த நேரத்தை பயன்படுத்தி தன்னுடைய முன்னோர்கள் பற்றி அறிய முற்பட்டிருக்கிறார்.

அதன்படி தனது பெற்றோர் மற்றும் தாத்தாவின் உதவியுடன் தனது மூதாதையர்களின் பெயர்கள், அவர்களது வாழ்க்கை, அவர்களுடைய ஊர் ஆகியவை பற்றி தகவல்களை திரட்டி இருக்கிறார் சங்கமித்ரா.

இவருடைய தேடல் நீள, பல அரிய தகவல்களை திரட்டியுள்ளார் சங்கமித்ரா. அதாவது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்த தனது முதல் தலைமுறை தாத்தா துவங்கி 7 தலைமுறையை சேர்ந்தவர்கள் வரை அறிந்திருக்கிறார் இந்த சிறுமி.


மேலும், அவர்களுடைய முதன்மை பணி, விருந்தோம்பல் பண்பு, கலாச்சார குணம் ஆகியவை பற்றியும் தகவல்களை ஆர்வத்துடன் திரட்டியுள்ளார் சங்க மித்ரா.

தன்னுடைய மூதாதையர்கள் பற்றி அறிந்துகொள்ளவே இந்த முயற்சியில் இறங்கியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் அவர். மேலும், இதுதொடர்பாக அவர் திரட்டிய புகைப்படங்களை கொண்டு ஒரு வரைபடத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் சங்க மித்ராவின் சித்தப்பாவான கவுதம் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது.

தன்னுடைய சித்தப்பாவின் திருமணத்தின்போது, தான் உருவாக்கி வைத்திருந்த சார்ட்டை திருமண பரிசாக அளித்திருக்கிறார் சங்க மித்ரா. இதனை கண்டு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் மூழ்கியுள்ள சிறுவர்களுக்கு மத்தியில் தன்னுடைய மூதாதையர்கள் குறித்து ஆர்வத்துடன் தகவல் சேகரித்த சங்க மித்ராவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்