சினிமா காட்சிகளை மிஞ்சும் ‘சீரியல் கில்லர்’.. கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் திடுக் திருப்பம்!!

497

கோவை..

கோவையில் கால் டாக்சி டிரைவரை தீர்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான, விஷ ஊசி போட்ட தம்பதியினர் தம்பதி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கோவை மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சனு (31). கால் டாக்சி டிரைவராக பணிபுரியும் இவருக்கு கடந்த 8-ஆம் தேதி இரவு மொபைல் போனில் அழைப்பு வந்தது. வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் இருப்பதாகவும், கோவை நகருக்கு செல்ல வேண்டும் என கூறி அழைத்துள்ளனர்.

உடனடியாக சனு கிளம்பி அங்கே சென்றார். அதற்கு பின்னர் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பெற்றோர் அவரை பல்வேறு பகுதியில் தேடி வந்துள்ளனர்.


இந்த நிலையில் அடுத்த நாள் காலையில் ஓணாப்பாளையம் சாலையில் கார் நிற்பதும், அதன் பின்னால் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இது பற்றி வடவள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது சனுவை தீர்த்துக் கட்டியது சென்னை திருப்போரூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் (42 வயது), மற்றும் இவரது 2-வது மனைவி அமலோற்பவம் (35 வயது) என்பது தெரியவந்தது.

ஸ்டீபன் மீது சென்னையில் 4 வழக்கு, துப்பாக்கி வைத்து மிரட்டிய வழக்கு இருப்பதாக தெரிகிறது. எஞ்சினியரிங் படித்த இவர் நெட்வொர்க் இன்ஜினியராக பணிபுரிந்துள்ளார். ஸ்டீபன் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், ‘‘என் முதல் மனைவிக்கு பல கோடி ரூபாய் சொத்து உள்ளது. அவர் எனது செயல்பாடுகள் பிடிக்காமல் என்னை விட்டு சென்றுவிட்டார். என் வீட்டில் குழந்தைகளை கவனிக்க வந்த அமலோற்பவத்தை இரண்டாவது திருமணம் செய்தேன்.

இதற்காக அவரது கணவரை விஷ ஊசி போட்டு தீர்த்துக் கட்டினேன். இது தொடர்பாக சென்னை காவல் துறையிடம் எங்கள் 2 பேர் மீதும் வழக்கு உள்ளது. நாங்கள் கைதாகி சிறை சென்று ஜாமீனில் வந்து தலைமறைவாக வாழ்ந்து வந்தோம்.

தற்போது கோவையில் ஆறு ஆண்டுகளாக வசித்து வந்தேன். என் முதல் மனைவியின் நிலம், சொத்து மூலமாக கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு கொண்டாட்டமாக செலவு செய்தோம். வடவள்ளி, கல்வீரம்பாளையம், பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதியில் வாழ்ந்து வந்தோம்.

கடைசியாக கலிக்கநாயக்கன்பாளையத்தில் இருக்கும் வீட்டில் வாழ்ந்தோம். தற்போது எங்களிடம் பணம் இல்லாததால் திருட திட்டம் போட்டோம். கால் டாக்சி டிரைவர் சனு அதிக பணம் வைத்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அவர் எங்கு சென்றாலும் கையில் பணம் இருக்கும் என்பதை அறிந்துக்கொண்டோம். எனவே சனுவை மொபைலில் தொடர்பு கொண்டு வரவழைத்தோம். அவரை குறிப்பிட்ட ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்து கட்டையால் அடிய்தோம். அப்போது உடனடியாக மயங்கி சரிந்தார்.

அதன்பின்னர் அவரை தீர்த்துக் கட்டும் விதமாக மாத்திரையை நீரில் கரைத்து ஊசி போட்டோம். இதில் 2 நிமிட நேரத்தில் சனு மரணித்து விட்டார். அவரின் இரு செல்போன்களையும் உடைத்து வீசி விட்டோம். அவரிடம் அதிக பணம் இருக்கும் என நினைத்து தான் வந்தோம்.

ஆனால் வெறும் 6 ஆயிரம் ரூபாய்தான் இருந்தது. நாங்கள் அவரை எங்களது மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியதன் மூலம் காவல் துறையினர் எங்களை கண்டுபிடித்து விட்டார்கள்’’ என்றார். ஸ்டீபன் சென்னையில் 4 பேரை கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களை சென்னை காவல் துறையினரும் விசாரிக்க உள்ளனர்.