சென்னை…..

சென்னை பெரம்பூர் பட்டேல் ரோடு பகுதியில் கண்ணைய்யா லால் ஜெயின் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பெண் ஒருவர் தாலி செயினில் உள்ள நகைகளை அடகு வைக்க வந்துள்ளார். தாலி செயினை அடகு வைப்பது குறித்து அடகுகடை உரிமையாளர் கேள்வி எழுப்பியபோது, மருத்துவ தேவை அவசரமாக பணம் வேண்டும் என்பதால் அடமானம் வைப்பதாக கூறியுள்ளார்.

அப்போது தாலி செயின் என்பதால் உரசி பார்க்கவேண்டாம் என அப்பெண் செண்டிமெண்டாக பேசியுள்ளார். மேலும் நகை அடகு வைக்க ஆதார் கார்டு நகல் கொடுக்குமாறு கேட்கும் போது, நாளை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

40 ஆயிரம் ரூபாய் கேட்ட நிலையில், அடகு கடைக்காரர் 20 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள 20 ஆயிரம் ரூபாயை நாளை ஆதார் கார்டை கொடுத்துவிட்டு வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து பணத்தை வாங்கி சென்ற பெண், மறுநாள் ஆதார் கார்டு எடுத்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கண்ணையா லால் ஜெயின், அப்பெண் அடகுவைத்த நகையை சோதனை செய்து பார்த்த போது அது போலி நகை என தெரிய வந்துள்ளது. உடனடியாக செம்பியம் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் கண்ணையா லால் ஜெயின் புகார் அளித்தார்.

மேலும் நகை கடை உரிமையாளர்கள் உள்ள குரூப்பில் பதிவிட்டுள்ளார். அப்போது சென்னை அரும்பாக்கத்தில் சுரேந்தர்குமாருக்கு (52), என்பவர் கடையிலும் இதுபோன்று மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இந்த கடையில் நடந்த மோசடி தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை வைத்து மோசடி செய்த பெண்ணை கண்டுபிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கீழ்பாக்கம் ஏ.கே நகரை சேர்ந்த மகாலட்சுமி (33) என்பதும் இவர் ஒராண்டு முன்பு ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் டைப்பிஸ்டாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், பிடிபட்ட மகாலட்சுமி இதே போல் செம்பியம், திருவிகநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலி நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.2,500 பணம், 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், கணவர் பிரிந்துசென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து சென்றதால், தனது மகனை வளர்க்க காசு இல்லமால் கஷ்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். பல சின்னத்திரை தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நாடகங்களிலும் மற்றும் விளம்பரங்களில் நடித்து வருவதாகவும் தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் நிறுத்தியபோது மகாலட்சுமியின் வாக்குமூலத்தை படித்த நீதிபதி, மகனின் படிப்புக்காக மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதால் அதன் அடிப்படையில் மகாலட்சுமியை எச்சரித்து மட்டும் அனுப்பியுள்ளனர். இருப்பினும் செம்பியம் ,திருவிக நகர் பகுதியில் மோசடி ஈடுபட்டதாக புகார் இருப்பதால், அந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















