‘சுப்பிரமணியபுரம்’ பட பாணியில் கொலை : காதலிக்கு தெரிந்தே நடந்த சம்பவம்!!

514

தஞ்சாவூரில்..

தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் மகளின் காதலனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை, தம்பி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது இளைய மகன் சக்திவேல் (23). தனியார் பால் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி அன்று வீட்டை விட்டு சென்ற சக்திவேல் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது அண்ணன் சரவணன் வல்லம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சித்தாரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி அன்று அம்மாபேட்டை அருகே ராராமுத்திரைக் கோட்டை பகுதியில் புது ஆற்றில் வெட்டுக் காயங்களுடன் வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


இதை எடுத்து வல்லம் போலீசார் சக்திவேலுவின் உறவினர்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்றனர். இதில் சில அடையாளங்களை பார்த்து அது சக்திவேல் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் படி, வல்லம் டி.எஸ்.பி. நித்யா மேற்பார்வையில் வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சித்தாரா மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இதில் சக்திவேலுக்கும், அய்யாசாமிப்பட்டியை சேர்ந்த பாலகுரு என்பவரின் மகள் தேவிகா (19) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இந்நிலையில் பாலகுரு வல்லம்புதூர் விஏஓ வள்ளி என்பவரிடம் சரண் அடைந்துள்ளார்.

தொடர்ந்து சக்திவேலுவை மதுரையிலிருந்து கூலிப்படையை அழைத்து வந்து கொலை செய்ததை ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். பின்னர் விஏஓ வள்ளி, வல்லம் போலீசாரிடம் பாலகுருவை ஒப்படைத்தார்.

பின்னர் அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தன் மகள் தேவிகாவை சக்திவேல் காதலித்து வந்ததை அறிந்த பாலகுருவுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. மேலும் தனது மகளை சக்திவேலுவுக்கு திருமணம் செய்து வைக்க பாலகுருவுக்கு விருப்பம் இல்லை.

இதனால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக டீக்கடை உரிமையாளர் செங்கிப்பட்டியை சேர்ந்த சத்யா என்பவர் மூலம் மதுரையை சேர்ந்த கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கிடையில் சக்திவேல் அடிக்கடி பாலகுருவிடம் அவரது நிலம் விற்பனை சம்பந்தமாக வந்து பேசி செல்வது வழக்கம். இதை பயன்படுத்தி தன்னை நிலத்தை விற்பனை செய்வது குறித்து பேச வேண்டும் என்று சக்திவேலுவை கடந்த 6ம் தேதி திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள தனது தென்னந்தோப்பிற்கு பாலகுரு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் அங்கு மறைந்திருந்த மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் 3 பேர் சக்திவேலுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதற்கு பாலகுருவின் மகன் துரைமுருகன் மற்றும் பாலகுருவிடம் வேலை பார்க்கும் கதிர்வேல் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

பின்னர் சக்திவேலுவின் உடலை ஒரு வாகனத்தில் மறைத்து எடுத்துச் சென்று குருவாடிப்பட்டி பகுதியில் புது ஆற்றில் வீசியுள்ளனர். மேலும் அவர் வந்த பைக்கையும் ஆற்றில் வீசிவிட்டு திரும்பி உள்ளனர் என்று தெரிய வந்தது. மேலும் சக்திவேலை கொலை செய்ய தனது தந்தை திட்டம் தீட்டியது தேவிகாவிற்கும் தெரிந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.

தொடர்ந்து சத்யா, துரைமுருகன், கதிர்வேல், தேவிகா ஆகியோரை வல்லம் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் பாலகுருவிடம் மீதி பணத்தை வாங்க வந்துள்ளனர். இத்தகவல் அறிந்த போலீசார் அவர்களையும் கைது செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பாலகுரு (48), அவரது மகன் துரைமுருகன் (19), மகள் தேவிகா (20), சத்யா (34), கதிர்வேல் (45), கூலிப்படையை சேர்ந்த கிரிவாசன் (45), சந்தோஷ்குமார் (44), கார்த்தி (35) ஆகிய 8 பேரையும் தஞ்சை நீதிமன்றத்தில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர்.

பின்னர் தேவிகா திருச்சி சிறையிலும், மற்ற 7 பேரும் புதுக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர். சுப்ரமணியம் திரைப்படத்தில் வரும் காட்சிபோல் வல்லம் பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.