ஜலதோஷத்திற்கு ஆவி பிடித்த நர்சிங் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

1057

தூத்துக்குடி..

தூத்துக்குடி மேல சேர்ந்த பூமங்கலத்தில் வசித்து வருபவர் கோமதி நாயகம். தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் 19வயது கௌசல்யா.

அதே பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக ஜலதோஷம், மூக்கடைப்பு என சிரமப்பட்டு வந்த கௌசல்யா, அருகில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. எனினும் ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலையில் கல்லூரிக்கு கிளம்பிய கவுசல்யா, அதன்முன்பு வெந்நீரில் மருந்தைப் போட்டு ஆவிப் பிடித்துள்ளார். ஆவிப் பிடித்த அடுத்த நிமிடமே மயக்கமான கவுசல்யாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.


இதனால் கவுசல்யா தன் முன்பாக இருந்த வெந்நீர் பாத்திரத்திலேயே தலை கவிழ்ந்து மயங்கி விழுந்தார். கீழே விழுந்தும், வெந்நீர் பட்டும் அவர் காயமடைந்துள்ளார்.

இதனை பார்த்த கவுசல்யாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் பெற்றோர், உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சளி பிரச்னைக்கு ஆவிப்பிடித்து மயங்கி விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.