தண்டவாளத்தில் தாயின் சடலம்… அருகே வாயில் நுரை தள்ளியபடி மகள்கள்! காரணம் என்ன?

536

விழுப்புரம்……..

விழுப்புரம் அருகே தாய் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி கஜேந்திரன்(40). இவரது மனைவி கவிதா(35). பவித்ரா(17) மற்றும் சர்மிளா(13) என்ற இரண்டு மகள்களும் இருந்துள்ளனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவரால் அவதிப்பட்டு வந்த கவிதா, அக்கம்பக்கத்தினரிடம் கடன்வாங்கி குடும்பத்தினை நடத்தி வந்துள்ளார்.

மிகவும் வறுமையில் சிக்கிய இவர்களின் குடும்பத்தில் கஜேந்திரனின் தொல்லை தாங்கமுடியாமலும், கடனைத் திருப்பி செலுத்த முடியாமலும் தவித்துள்ளார்.


இந்நிலையில் மகள்களுடன் தற்கொலை முடிவினை எடுத்த கவிதா, வீட்டில் கோவிலுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றநிலையில், வெகுநேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

பின்பு உறவினர்கள் தேடிய போது, அதே பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கவிதா சடலமாகவும், அருகில் இரண்டு மகள்கள் வாயில் நுரை தள்ளியும் காணப்பட்டுள்ளனர்.

இதில் மூத்தமகள் உயிரிழந்த நிலையில் இளைய மகள் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.