
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பெரும் துயரமாக மின்னல் தாக்கியதில் சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாழவந்தாள்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் நூருல் அமீன். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள்கள் செய்யது 13 வயது அஸ்பியா பானு, 9 வயது சபிக்கா பானு.
இதில் மூத்த மகள் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பும், இளைய மகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை தினம் என்பதால் அக்காள், தங்கை இருவரும் வீட்டின் அருகே வயலில் வேப்ப விதைகளை சேகரிக்க சென்றனர். அப்போது இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.
இருவரையும் திடீரென மின்னல் தாக்கியது. இதில் செய்யது அஸ்பியா பானு, சுபிக்கா பானு ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெற்றோர், உறவினர்கள் இருவரது உடல்களையும் பார்த்துக் கதறி அழுதனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.















