தலைபிரசவம்.. வளைகாப்புக்குச் சென்ற கர்ப்பிணி ரயிலில் தவறி விழுந்து பலியான சோகம்!!

47

இன்னும் ரெண்டே நாள் தான். உறவினர்கள், நண்பர்கள் என ஊரே அத்தனை சந்தோஷமாக நிறைமாத கர்ப்பிணியை வரவேற்க தயாராகி இருந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடைப்பெற உள்ள நிலையில், சொந்த ஊருக்கு ரயிலில் சென்றுக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி அருகே மேல் நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில், கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்ததால், அவருக்கு வளைகாப்பு செய்ய குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து கர்ப்பிணி கஸ்தூரி தனது குடும்பத்தினருடன் நேற்றிரவு புறப்பட்ட கொல்லம் விரைவு ரயிலில் தென்காசிக்கு பயணம் செய்துள்ளார். ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது கஸ்தூரிக்கு வாந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் ரயிலின் கதவருகே சென்று வாந்தி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது திடீரென மயக்கமும் ஏற்பட்ட நிலையில், கஸ்தூரி நிலைதடுமாறி ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஸ்தூரியின் உடலை மீட்ட விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினர், கஸ்தூரியின் உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


சொந்த ஊரில் நடைபெற உள்ள கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளவும், நாளை மறுதினம் வளைகாப்பு நிகழ்ச்சிக்காகவும் சென்னையில் இருந்து சந்தோஷமாக கிளம்பிய கர்ப்பிணி பெண், திருமணமான 8 மாதங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.