ராஜஸ்தான்…

ராஜஸ்தான் மாநிலம் பாவ்புரா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ் ரத்தோர். அதே ராஜஸ்தான் மாநிலத்தின் ராவட்பாட்டா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மது ரத்தோர். இவர்கள் இருவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. மணப்பெண் மது ரத்தோர், படிக்கட்டுகளில் இருந்து தவறி கீழே விழுந்து கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அவரது தலையிலும் காயம் ஏற்பட இதன் காரணமாக கோட்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலும் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் வந்தது. திருமண நாளும் நெருங்கி வந்த சூழலில் இதன் காரணமாக என்ன செய்வது என இருவரது குடும்பத்தினரும் கலந்து ஆலோசித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி இருக்கையில், மாப்பிள்ளையான பங்கஜ் தன்னுடைய திருமணத்தை மருத்துவமனையில் வைத்தே நடத்தி கொள்ளலாம் என்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அனைவரும் கூட மருத்துவமனையில் திருமணத்தை நடத்த சம்பந்தமும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி மருத்துவமனையில் வைத்து திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு, காட்டேஜ் ஒன்றில் விருந்துகளுக்காக அறைகளையும் எடுத்துள்ளனர். அதன்படி, பங்கஜ் மற்றும் மது ஆகியோரின் திருமணம் மருத்துவமனை வளாகத்திலேயே நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அது மட்டுமில்லாமல் திருமணத்துக்கு பிறகும் உள்ள சடங்குகளும் அந்த காட்டேஜில் உள்ள ரூமில் வைத்து நடைபெற்றதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், மது குணமடைய இன்னும் சில தினங்கள் மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய சூழலில்,

அவர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது. மேலும், சில நாட்கள் கழித்து அவரது திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று மருத்துவர்கள் பங்கஜ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அறிவுறுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.















