சென்னை..

சென்னை கொருக்குபேட்டை, பாரதி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக உள்ளார். இவருக்கும் சத்ய பிரியா (வயது 25) என்பவருக்கும் 4 மாதத்திற்கு முன்புதான் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. சத்ய பிரியாவும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், சத்ய பிரியாவை வேலைக்கு செல்லக்கூடாது என்று ராஜ்குமார் கூறவே கடந்த 7ஆம் தேதியில் இருந்து சத்ய பிரியா வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜ்குமார் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவில்லை.

மேலும், சத்ய பிரியாவை செல்போனில் தொடர்பு கொண்டபோதும் போனை எடுக்கவில்லை. இதனால் பதட்டமான ராஜ்குமார் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது படுக்கை அறைக்குள் சத்ய பிரியா புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தார்.

உடனே சம்பவம் அறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீசார் சத்ய பிரியாவின் படுக்கை அறையை ஆய்வு செய்து பின்னர் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சத்ய பிரியாவுக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆகியுள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருமணமாகி 4 மாதத்திலேயே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.















