திருமணம் செய்யும்படி நெருக்கடி கொடுத்த காதலன் : பாலிவுட் பெண் மேக்கப் கலைஞர் எடுத்த விபரீத முடிவு!!

677

மும்பை…

பாலிவுட், டி.வி நட்சத்திரங்களுக்கு மேக்கப் கலைஞராக இருந்தவர் சாரா. மும்பையிலுள்ள அந்தேரி லோகண்ட்வாலாவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.

அவர் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு தனது வீட்டை பாந்த்ராவுக்கு மாற்றினார். முன்பிருந்த வீட்டுக்கு வாடகை பாக்கி வைத்திருந்தார். இதனால் ரியல் எஸ்டேட் புரோக்கர் வாடகை கேட்பதற்காக சாராவுக்கு போன் செய்தார். ஆனால், சாரா போனை எடுக்கவில்லை.

இதனால் பாந்த்ராவிலுள்ள வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிப் பார்த்தார். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. மீண்டும் போன் செய்து பார்த்தார். ஆனாலும் போன் எடுக்கப்படவில்லை.


சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தார். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தபோது உள்ளே சாரா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

அவரின் கையில் வெட்டுக்காயம் இருந்தது. அவரது உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அந்தப் பெண் நாகாலாந்தைச் சேர்ந்தவர். நாகாலாந்திலுள்ள தொண்டு நிறுவனம் மூலம் அவரின் தாயார் கண்டுபிடிக்கப்பட்டு தகவல் கொடுக்கப்பட்டது.

தாயார் தற்போது மும்பைக்கு வந்திருக்கிறார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் அவரிடம் வழங்கப்பட்டது. இது குறித்து சாராவின் தாயார் ரோஜி கூறுகையில்,

என்னுடைய மகள் எதையும் அதிகமாக என்னிடம் பகிர்ந்துகொள்ளமாட்டார். ஆனால், சில நாள்களுக்கு முன்பு என்னிடம் போனில் பேசியபோது, ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் ஒருவரை காதலிப்பதாகத் தெரிவித்தார்.

அதோடு வங்கி அதிகாரி தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்தார். ஆனால், இப்போது தான் திருமணம் செய்துகொள்ளத் தயாராக இல்லை என்று சாரா தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்து சாராவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார். சாராவின் வீடு முழுக்க ரத்தமாக இருக்கிறது. அவரை யாரோ கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிஜித் மானே இது குறித்துப் பேசுகையில், “விபத்து மரணமாக வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். பிரேத பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.