திருமணம் மீறிய உறவு.. மலைப் பகுதியில் அழுகிக் கிடந்த பெண்ணின் சடலம்.. நடந்தது என்ன?

104

திருமணம் மீறிய உறவால் சென்னை பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பத்து நாள்களுக்கு பிறகு அவரது சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது இரண்டாவது மகள் தீபா – வயது 33. கடந்த 2014-ம் ஆண்டு நிர்மல் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட தீபா கருத்து – வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோருடன் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியிலுள்ள நண்பர் வீட்டுக்குச் சென்று வருவதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு ரயில் மூலமாக குடியாத்தம் வந்திருக்கிறார் தீபா. குடியாத்தம் வந்த பிறகு தாய் சிவகாமியிடமும் போன் மூலமாக பேசியிருக்கிறார்.

அதன் பிறகு தீபாவிடம் இருந்து எந்த அழைப்பும் பெற்றோருக்குச் செல்லவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. மகள் இரண்டு நாள்களாகியும் வீடு திரும்பாததால் பதறிபோன பெற்றோர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

ஒன்பது நாள்களுக்குப் பிறகுப் பிறகு போலீஸார் தீபாவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது. குடியாத்தம் ஆர்.எஸ்.ரோடு பகுதியில் சிக்னல் ‘கட்’ ஆகியிருந்தது தெரியவந்தது. நாகல் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஹேமந்தராஜ் என்ற 25 வயது இளைஞருடன் கடைசியாக தீபா பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்றைய தினம் ஹேமந்த்ராஜை பிடித்து விசாரணை நடத்திய போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிக்னல் கட் ஆன தூரத்தில் இருந்து சிறிது தொலைவிலுள்ள நெட்டேரி மலைப் பகுதியில் தீபாவை கழுத்தறுத்து கொன்று சடலத்தை மறைத்திருப்பதாக ஹேமந்த்ராஜ் கூறினார்.


இதையடுத்து, சம்பவ இடத்துக்கு குடியாத்தம் தாலுகா போலீஸாருடன் இணைந்து சென்ற புளியந்தோப்பு போலீஸார், அங்கு அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்த தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், ஹேமந்த்ராஜ் ஏற்கெனவே குற்றப் பின்னணியுடையவர் எனத் தெரியவந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காட்பாடி அருகே ரயிலில் சென்ற இளம் பெண்ணை தாக்கி செயின், செல்போன் பறித்துகொண்டு அவரை கீழேயும் தள்ளிவிட்டுச் சென்ற வழக்கில் ஹேமந்த்ராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது ‘குண்டர்’ சட்டமும் பாய்ந்திருக்கிறது.

11 மாதங்கள் சிறை வாசத்துக்குப் பிறகு வெளியே வந்த ஹேமந்த்ராஜ் சென்னை சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள செல்போன் கடையில் தீபா வேலை செய்து வந்துள்ளார். அந்தக் கடையில் ‘சிம் கார்டு’ வாங்கச் சென்ற ஹேமந்த்ராஜிக்கு தீபாவுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

திருமணம் மீறிய உறவில், இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில்தான் தீபாவை குடியாத்தம் வரவழைத்து ஆளில்லாத மலை பகுதிக்கு அழைத்து சென்று தனிமையில் இருந்திருக்கிறார் ஹேமந்த்ராஜ். அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தீபா வற்புறுத்தி சண்டை போட்டிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹேமந்த்ராஜ் தீபாவை தீர்த்து கட்டி மலை பகுதியில் சடலத்தை மறைத்துவிட்டு, தீபாவின் செல்போனையும் தண்டவாள பகுதியில் வீசிச் சென்றது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, ஹேமந்த்ராஜை கைது செய்த போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.