திருவிழாவில் 7 வயது சிறுவன் துடிதுடித்து பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

349

ராமநாதபுரத்தில்..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலாயக்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. உறி அடித்த பின்பு அந்த பானையின் கயிற்றை பிடித்து இழுத்து அங்கிருந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அதன் அருகில் சென்ற மின்சார கம்பி மீது அந்த கயிறு உரசிவிட்டது.இதனால் விளையாடிக்கொண்டிருந்த 4 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். அதில் பரமக்குடி மணி நகரில் வசித்து வரும் முருகன் என்பவரின் மகன் கபினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

கபினேஷுக்கு வயது 7. அந்த சிறுவன் சோமநாதபுரத்தில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். அவனது அண்ணன் கோகுல ராகுல் (10) படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். முருகன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.


சொந்த ஊரான மேலாயக்குடியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு சிறுவர்கள் தனது தாயார் அனுசுயா தேவியுடன் சென்றுள்ளனர். அப்போது தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது கிராமம் முழுவதுமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.