தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொடூரம் : ஹனிமூன் கொலை வழக்கு திரைப்படமாகிறது!!

466

இந்தூரில் மிகப்பெரிய போக்குவரத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி. இவர் தேனிலவுக்காக மேகாலயா சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் “ஷில்லாங்கில் ஹனிமூன்” என்ற பெயரில் வெளியாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் எஸ்.பி. நிம்பவத் இயக்கத்தில் உருவாக இருக்கிறது.

“திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட துரோகங்களை வெளிக்கொண்டு வருவதன் மூலம், சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நம்முடைய நோக்கம்” என இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

ராஜாவின் சகோதரர் சச்சின் மற்றும் விபின் ஆகியோர், இந்த உண்மை சம்பவத்தை மக்கள் மத்தியில் கொண்டு வருவதால் தான் திரைப்படமாக ஒப்புதல் அளித்ததாக கூறியுள்ளனர்.

“இப்படம் வெளிவரும்போது தான், எங்கள் சகோதரனுக்கு நடந்தது என்ன என்பதை அனைவரும் உணர முடியும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர். படத்தின் 80% படப்பிடிப்பு இந்தூரில், மீதியுள்ள 20% மேகாலயாவில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மே 23ம் தேதி மேகாலயா மாநிலத்தின் சோஹ்ரா பகுதியில் தேனிலவுக்காக சென்ற ராஜா ரகுவன்ஷி காணாமல் போய்விட்டார். ஜூன் 2ம் தேதி, ஒரு நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஆழமான பள்ளத்தாக்கில் அவரது சிதிலமான உடல் கண்டெடுக்கப்பட்டது.


இந்த கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் மற்றும் அவளது காதலர் ராஜ் குஷ்வாஹா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.