
ஆண் நண்பரின் பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மனைவியை பட்டப்பகலில் துரத்திச் சென்று கணவர் சுட்டுக் கொன்ற சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் அரவிந்த் மற்றும் நந்தினி. கடந்த 2023ல் இவர்களுக்கு திருமணமான நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நந்தினிக்கு அன்குஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அன்குஷ் பர்த்டே பார்ட்டிக்கு நந்தினி சென்றுள்ளார்.
அங்கு பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் நந்தினி பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து அரவிந்துக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நந்தினி, அன்குஷ் மற்றும் அவரது நண்பர் கல்லு என 3 பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்ததை நந்தினியின் கணவர் அரவிந்த் பார்த்துள்ளார்.
ஏற்கெனவே கோபத்தில் இருந்த அரவிந்த் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, மற்றொரு ஆட்டோவில் அவர்களை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளார்.
பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நந்தினியை அடுத்தடுத்து சுட்டார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தப்பியோட முயன்ற அரவிந்த் போலீசாரை நோக்கி சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். போராட்டத்திற்குப் பின் அரவிந்தைப் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த நந்தினி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவர் பட்டப்பகலில் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசாரின் விசாரணையில் நந்தினியைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக அரவிந்துக்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணமாகி, ஒரு குழந்தையும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது நந்தினிக்கு தெரிய வந்த நிலையில், அவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பிறகு நந்தினி மீது கோபமடைந்த அரவிந்த், ஒருமுறை நந்தினி மீது கார் ஏற்றி கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாகவும் நந்தினி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் அரவிந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த அரவிந்த், தன் மீதான வழக்கை வாபஸ் வாங்குமாறு தொடர்ந்து நந்தினி மற்றும் அவரது பெற்றோரை மிரட்டி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
நந்தினி வழக்கை வாபஸ் வாங்க மறுத்து வந்த நிலையில், ஆண் நண்பரின் துணையுடன் தான் நந்தினி இது போன்று செய்து வருவதாக கோபமடைந்த அரவிந்த் நடுரோட்டில் நந்தினியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்துள்ளார்.















