நியூசிலாந்து பாராளுமன்ற பொதுத் தேர்தல் – போட்டியிடும் இலங்கைப் பெண்!!

938

நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்ப பின்னணியை சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் என்பவரே போட்டியிடவுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் வனுஷி ஆக்லான்டில் போட்டியிடவுள்ளார்.

வனுஷி நியூசிலாந்து அரசாங்கத்திலும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு பொறுப்பு வாய்ந்த உயர் பதவிகளை வகித்ததன் மூலம் பரந்த நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும் கொண்டவர். சட்டத்துறையிலும், இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் பலவற்றிலும் முக்கியமான பதவிகளையும் வகித்திருக்கின்றார்.


தற்போது நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு சிரேஷ்ட முகாமையாளராகவும் பதவி வகிக்கும் அவர், சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிர்வாகக் குழு உறுப்பினராகவும் செயற்படுகிறார்.

இலங்கையில் புகழ்பெற்ற சரவணமுத்துவின் அரசியல் குடும்பத்தில் வந்த வனுஷி, ஐந்து வயதாக இருக்கும் போதே நியூசிலாந்தில் குடியேறினார்.

வனுஷியின் தந்தை வழிவந்த பாட்டி லூசியா சரவணமுத்து இலங்கையின் அரசுப் பேரவையின் உறுப்பினராக கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து 1931 இல் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரது கணவரான சேர் ரட்ணசோதி சரவணமுத்து கொழும்பு மாநகர சபையின் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது பெயரிலேயே சரவணமுத்து ஸ்ரேடியம் அமைக்கப்பட்டது.

வனுஷி தேர்தலில் தெரிவு செய்யப்பட்டால் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.