நிறைமாத கர்ப்பிணி மருமகளை வெட்டி கொன்ற மாமனார் : தலை தீபாவளியில் கொடூரம்!!

226

தலைதீபாவளி சமயத்தில், நிறைமாத கர்ப்பிணியான மருமகளை வீட்டில் யாரும் இல்லாத போது, அத்துமீறி ஆக்ரோஷமாக நுழைந்து மாமனாரே ஜாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட மகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெட்டிக் கொன்ற சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், தாஹேகம் மண்டலத்திலுள்ள கெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணா. இவருக்கு குமார், சேகர் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இதில் சேகர், கடந்த ஆண்டு அதே பகுதியில் வசித்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரவாணி (21) எனும் இளம்பெண்ணைக் காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தை ஏற்காத சத்தியநாராயணா, சேகரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியேற்றினார்.

இதனால் தம்பதியினர் ஸ்ரவாணியின் பெற்றோருடன் வசித்து வந்தனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே அப்போதில் இருந்து தகராறு நிலவி வந்தது. இந்நிலையில் தலைதீபாவளி கொண்டாட இருந்த ஜோடி தீபாவளியை வரவேற்க காத்திருந்தனர்.

நேற்று முன் தினம் சேகர் மற்றும் ஸ்ரவாணியின் பெற்றோர் காட்டுப் பகுதிக்கு விறகு எடுக்க சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த ஸ்ரவாணியை குறி வைத்த சத்தியநாராயணா, தனது மூத்த மகன் குமார் மற்றும் மருமகள் கவிதாவுடன் சேர்ந்து வீட்டிற்குள் நுழைந்து ஸ்வரவாணியைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

கண்மூடித்தனமாக கோடாரி மற்றும் கத்தியால் 9 மாத கர்ப்பிணியான ஸ்ரவாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அலறலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


ஸ்ரவாணியின் தந்தை சென்னைய்யாவின் புகாரின் பேரில், மாமனார் சத்தியநாராயணா, மகன் குமார் மற்றும் மருமகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜாதி மறுப்பு திருமணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கோபம் கர்ப்பிணியின் உயிரை காவு கொண்ட கொடூரச் சம்பவம், அப்பகுதியில் சோகத்தையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.