பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் திடீர் மரணம் : நடைப்பயிற்சியின் போது ஏற்பட்ட பரிதாபம்!!

442

சேலம்..

சமீப காலமாக இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை பயன்பாடு மற்றும் குடிப்பழக்கம் மாதிரியானவை இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்டம் நான்கு ரோடு நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் வினித்குமார் (வயது 19). இவர் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தினமும் தான் வசிக்கும் பகுதியில் உள்ள காந்தி ஸ்டேடியத்தில் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலை வினித்குமார் தனது நண்பர்களுடன் காந்தி ஸ்டேடியத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.


அப்போது நன்றாக ஓடிக்கொண்டிருந்த வினித்குமார் திடீரென மயங்கி கிழே சுருண்டு விழுந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், உடனே என்ன செய்வது என்று தெரியாமல் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழவில்லை.

அந்த நேரத்தில் காந்தி ஸ்டேடியத்தில் டாக்டர் ஒருவரும் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவர் வினித்குமார் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து வினித்குமாரை பரிசோதித்து பார்த்தார். எனினும் வினித்குமார் கண் விழிக்கவில்லை.

இதன் பின்னர் வினித்குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வினித்குமார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு வினித்குமாரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் வினித்குமார் இறந்தது தெரியவந்தது. இதனால் அவரது நண்பர்கள் கதறி அழுதனர். நடைபயிற்சியின் போது வினித்குமார் மயங்கி விழுந்து இறந்தது அவரது நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வினித்குமார் மாரடைப்பால் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அஸ்தம்பட்டி போலீசார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரின் மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் முந்தைய நாள் இரவு வினித்குமார் பரோட்டா சாப்பிட்டு தூங்கியுள்ளார். எனினும், இதற்கும் உயிரிழப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இதேபோல் அதிகப்படியான உடற்பயிற்சி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதா? என்பது குறித்தும் போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.