கோயில் அருகே ஏற்பட்ட வாக்குவாதத்தில், பள்ளி மாணவனை குத்திக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணு பரத் (16). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மாதவபுரத்தில் உள்ள கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் 10ம் நாள் நிகழ்ச்சிகளை பார்க்க விஷ்ணுபரத் நண்பர்களுடன் சென்று இருந்தார். நள்ளிரவு 12.30 மணியளவில் அவர்கள் கோயில் அருகே நின்றிருந்தனர்.
அப்போது மாதவபுரத்தை சேர்ந்த, இன்ஜினீயரிங் கல்லூரி 2ம் ஆண்டு மாணவர் சந்துரு (21) அங்கு வந்தார். இவர் கல்லூரிக்கு சரியாக செல்லாமல் ஆட்டோ ஓட்டிவந்துள்ளார்.
அவர், கோயில் அருகே நின்றிருந்த விஷ்ணு பரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கோயில் திருவிழாவை பார்க்க வரக்கூடாது, ஊர்வலத்தில் நீ வந்தால், உன்னை விட மாட்டேன் என்று கூறி உள்ளார்.
இதில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த சந்துரு கையில் வைத்திருந்த கம்பியால் விஷ்ணு பரத்தை சரமாரியாக குத்தினார். இதில் அவரது மார்பு மற்றும் விலா, கை பகுதியில் குத்து விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்ததும் அதிர்ச்சியடைந்த சந்துரு தனது ஆட்டோவில் ஏற்றி கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு விஷ்ணுபரத்தின் தந்தை கண்ணன் உள்பட உறவினர்கள் வரவே, சந்துரு தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் விஷ்ணுபரத்தை உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் விஷ்ணுபரத் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிந்து, நேற்று காலை கூடங்குளம் பகுதியில் பதுங்கியிருந்த சந்துருவை கைது செய்தனர்.