வேலூர்…

வேலூர் மாவட்டம், காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி ஜானி மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. தற்போது அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், ஜானியின் காதல் மனைவி ஷாலினியையும் பாகாயம் போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

இது பற்றிப் பேசிய போலீஸார், ‘‘ஜானியின் மனைவி ஷாலினி, கடந்த 3-ம் தேதி வேலூர் மத்திய சிறைக்கு வந்தார். தன்னை ‘வழக்கறிஞர்’ எனச் சொல்லி அடையாள அட்டை ஒன்றைக் காண்பித்து, ’சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஜானிக்கு வேண்டப்பட்ட விசாரணைக் கைதி சீனிவாசனைச் சந்திக்க வேண்டும்’ என்றார்.

அவரின் வழக்கறிஞர் அட்டையை ஆன்லைன் மூலம் சோதனை செய்தபோது, பார் கவுன்சிலில் பதிவுசெய்யப்படவில்லை எனத் தெரியவந்தது. விசாரித்தபோது, டெல்லி பார் கவுன்சிலில் பதிவுசெய்திருப்பதாகச் சொன்னார்.

அவரின் அடையாள அட்டை எண் – 1505D. ஆனால், டெல்லி பார் கவுன்சிலில் 13-02-2023 அன்றைய தினம் வரை மட்டுமே அப்டேட் செய்யப்பட்டிருந்தது. அதில், 1389D என்ற வரிசை வரைமட்டுமே பதிவெண்கள் காட்டின.

பொதுவாக, எந்த மாநிலத்தின் பார் கவுன்சிலில் வேண்டுமானாலும் வழக்கறிஞர்கள் பதிவுசெய்துகொள்ளலாம். ஆனால், அவர்களின்மீது குற்றவியல் வழக்குகள் ஏதேனும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் அவர்களது முகவரி அடங்கிய மாநில போலீஸாரிடம்,
முன்கூட்டியே கடிதம் பெற்று, பார் கவுன்சிலில் கொடுக்க வேண்டும். இவ்வளவு நடைமுறைகள் இருக்கின்றன. ஷாலினி அப்படி எதையும் பின்பற்றாமல், டெல்லி பார்கவுன்சிலில் எப்படி பதிவுசெய்தார் என்பதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, ‘ஷாலினியின் அடையாள அட்டை போலியானது’ என்ற முடிவுக்குவந்த மத்திய சிறையின் ஜெயிலர் மோகன்குமார் பாகாயம் காவல் நிலையத்தில் ஷாலினி மீது புகாரளித்தார்.

அதன்பேரில், மோசடி, பொய்யான ஆவணம் காட்டியது, காவல்துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உட்பட ஆறு பிரிவுகளின்கீழ் (IPC 465, 468, 471, 353, 419, 420) வழக்கு பதிவுசெய்து, ஷாலினியைத் தேடிவந்தோம். இந்த நிலையில், அவர் இன்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார். விசாரணைக்குப் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுவார்’’ எனத் தெரிவித்திருக்கிறார்கள்.















