புதைக்க குழி தோண்டியிருப்பதை அறியாமல் ஊருக்கு திரும்பிய ஆடிட்டர் தம்பதிக்கு அரங்கேறிய கொடூரம்!!

863

சென்னை..

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60), இவர் மனைவி அனுராதா (55) இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளியான ஓட்டுநரின் தந்தையை நேபாளத்திற்கு சென்று விசாரிக்க தனிப்படை விரைகிறது.

மயிலாப்பூர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த்தின் மகன் சஸ்வத், மகள் சுனந்தா இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். ஆடிட்டர் ஸ்ரீகாந்த் சென்னையில் ஐடி கம்பெனியை நடத்தி வந்துள்ளார்.

மேலும், மகாபலிபுரம் அருகே நெமிலிச்சேரியில் இவருக்கு சொந்தமாக பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டை ஸ்ரீகாந்துக்கு நம்பிக்கைக்குரியவரான ஒருவர் பராமரித்து வருகிறார். இவரது மகன்தான் கிருஷ்ணா என்ற பதம்லால் கிஷன். இவர் நேபாலை சேர்ந்தவர்.


ஸ்ரீகாந்துக்கு ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்த கிருஷ்ணாவுக்கு ஸ்ரீகாந்த் தனது வீட்டருகிலேயே வசிக்க தனி அறையை கொடுத்துள்ளார். இந்த நிலைலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆடிட்டரின் குடும்பம் பிள்ளைகளை பார்க்க அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அவர்களை ஓட்டுநர் கிருஷ்ணாதான் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது ஆடிட்டர் ஸ்ரீகாந்த் நில விற்பனை மூலம் கிடைத்த 40 கோடி ரூபாயை வீட்டில் வைத்திருப்பதாக வேறொருவரிடம் போனில் பேசும்போது கூறியுள்ளார். எப்படியாவது அந்த பணத்தை ஸ்ரீகாந்த்திடம் இருந்து சுருட்டிவிட வேண்டும் என்று கிருஷ்ணாவும், டார்ஜிலிங்கை சேர்ந்த இவரது நண்பர் ரவியும் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், ஸ்ரீகாந்த் குடும்பம் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதால் வீட்டை கிருஷ்ணாதான் பராமரித்து வந்துள்ளார். ஆனால், வீட்டு சாவி மற்றும் பணம் வைக்கப்பட்டுள்ள லாக்கர் சாவி உட்பட ஸ்ரீகாந்த்திடம் இருந்ததால் தம்பதி வரும்வரைக்கும் இருவரும் காத்திருந்தனர்.

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகியோர் திரும்பியுள்ளனர். இவர்களை வீட்டுக்கு அழைத்து வர கார் டிரைவர் கிருஷ்ணா விமான நிலையம் சென்றுள்ளார்.

பின்னர் வீட்டுக்குள் வைத்து ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் உருட்டு கட்டையால் அடித்து பணம் எங்கே என்று கேட்டுள்ளனர். அப்போது பணம் வீட்டில் இல்லை என்று ஆடிட்டரும் அவரது மனைவியும் கூறியுள்ளனர். ஆனாலும், இருவரையும் அடித்து கொலை செய்துவிட்டு உடலை காரில் ஏற்றிக்கொண்டு மகாபலிபுரத்தில் உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் புதைத்துள்ளனர்.

புதைத்த கையோடு உடனே நேபாளம் சென்றுவிட காரில் புறப்பட்டுள்ளனர். இதற்குள் போலீசார் கிருஷ்ணா மீது சந்தேகப்பட்டு உடனே ஆந்திர போலீசாருக்கு அலெர்ட் செய்துள்ளனர். அதன்படி, ஓட்டுநர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து 9 கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி, வைர மூக்குத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் பண்ணை வீட்டிற்கு அழைத்து வந்த போலீசார் வட்டாட்சியர் முன்னிலையில் குழியை தோண்டி உடல்களை எடுத்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆடிட்டர் தம்பதியின் உடலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஆடிட்டரின் பிள்ளைகளும் இருவரும் சென்னைக்கு வந்தவுடன் அவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆடிட்டர் தம்பதியை கொலை செய்து புதைப்பதற்காக மூன்று நாட்களுக்கு முன்பே பண்ணை வீட்டில் குழி தோண்டியதாக ஓட்டுநர் கிருஷ்ணா தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பது உச்சகட்ட அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தங்களை புதைக்க குழி தோண்டப்பட்டிருப்பதை அறியாமல் பிள்ளைகளை பார்த்த சந்தோஷத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த ஆடிட்டர் தம்பதியின் கொலை சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே மகாபலிபுரம் பண்ணை வீட்டில் 20 வருடமாக காவலாளியாக இருந்து வரும் குற்றவாளி கிருஷ்ணாவின் தந்தை லால் சர்மா மற்றும் அவரது மனைவியும் கொலை நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பே நேபாளம் சென்றுள்ளனர். இதனால் இவர்களுக்கு ஏற்கனவே கொலை சம்பவம் குறித்து தெரிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த நேபாளத்துக்கு தனிப்படையை அனுப்பவுள்ளனர்.