சென்னையில்..

சென்னை கொளப்பாக்கத்தில் நடராஜன் – சுலோச்சனா தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு தினேஷ்குமார் என்ற மகனும், மீனாட்சி (18) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மீனாட்சிக்குபிறந்தது முதல் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளார்.
மனவளர்ச்சி குன்றிய மீனாட்சியை சுலோச்சனா மற்றும் அவரது கணவர் நடராஜனும் கவனித்து வந்தனர். மகள் மனவளர்ச்சி குன்றி கஷ்டப்பட்டு வந்ததால் பெற்றோர் மிகவும் மனவேதனை அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுலோச்சனா திடீரென தனது மகள் மீனாட்சி மீதும், தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அப்போது சுலோச்சனாவின் கணவர் நடராஜன், மகன் தினேஷ் ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். இவர் உடலிலும் தீப்பற்றி எரிந்ததால் அலறி துடித்தனர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது சுலோச்சனாவும் அவரது மகள் மீனாட்சியும் தீயில் கருகுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுலோச்சனா முதலில் பரிதாபமாக உயிரிழந்தார். மீனாட்சிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் தனது காலத்திற்குப் பிறகு மகளின் நிலை என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















