கேரளா..

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த புகார் அப்போது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 32 வயதான அந்தப் பெண் அளித்த புகாரில், தனது கணவர் தன்னை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாக குற்றம்சாட்டி இருந்தார்.

ஷினோ மேத்யூ என்பவர் மீது அவரது மனைவியான இளம்பெண் கடந்த 2020ஆம் ஆண்டு அளித்த புகாரில், தனக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், நன்றாகச் சென்றுகொண்டிருந்த உறவில் ஒரு சமூக வலைதள குழுவால் மோசமான சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்பெண்ணின் கணவர் சமூக வலைதளத்தில் உள்ள ஒரு குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். அந்த குழுவில் இருப்பவர்கள் அடிக்கடி குடும்பத்துடன் சந்தித்து கொள்வார்கள். அப்போது குழுவில் உள்ளவர்கள் ஜோடிகளை மாற்றிக்கொண்டு உறவு கொள்வார்கள். அதாவது, குழுவில் இருக்கும் ஆண்கள், தங்கள் மனைவியரை மாற்றி உறவு வைத்துக் கொள்வார்கள்.

அப்படி, இந்த புகார் அளித்த பெண்ணை, அவரது கணவர் ஷினோ மேத்யூ, அந்தக் குழுவினரின் சந்திப்புக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்களுடன் தனது மனைவியை உறவு கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார் ஷினோ மேத்யூ. இது தனக்கு பிடிக்கவில்லை எனக்கூறிய பின்னரும் கட்டாயப்படுத்தி உறவு கொள்ளச் செய்துள்ளார்.

இதனால் அப்பெண் சிலருடன் கட்டாய உறவில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து, அப்பெண் தனக்கு தொல்லை தரும் கணவர் மற்றும் அந்த பார்ட்னர் ஸ்வாப்பிங் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் கணவர் உட்பட 7 பேர் தங்களது மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டு வந்ததையும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததையும் கேட்டு அதிர்ந்தனர்.

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் என 7 பேரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கலாச்சாரத்தில் இவர்களுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். 2 ஆண்டுகள் கழிந்த நிலையில், அதிர்ச்சி சம்பவமாக புகார் அளித்த அந்தப் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

பார்ட்னர் ஸ்வாப்பிங் குழு பற்றி போலீசில் புகார் கொடுத்த பெண், கணவரை பிரிந்து கோட்டயம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். நேற்று அவரது வீடு நீண்ட நேரமாக பூட்டிக்கிடந்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு அந்த பெண் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அந்த பெண்ணின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அந்த பெண்ணை கொலை செய்தவர்கள் யார் என்பது பற்றி விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே அந்தப் பெண்ணின் உறவினர்களும் அங்கே வந்தனர். அவர்கள், பெண்ணை கொலை செய்தது, அவரது கணவர் தான் என்றும், அவரை உடனே கைது செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் கூறினர். இதையடுத்து போலீசார், பெண்ணின் கணவரை தேடி அவர் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றனர்.















