மனைவியை கொலை செய்ததாக கணவர் கைது.. 6 வருஷத்துக்கு அப்புறம் இரண்டாவது கணவருடன் சிக்கிய பெண் : வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!

439

உத்திர பிரதேசம்..

உத்திர பிரதேசம் மாநிலம் விருந்தாவன் பகுதியைச் சேர்ந்தவர் சோனு சைனி. தற்போது அவருக்கு 32 வயதாகிறது. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆர்த்தி தேவி எனும் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.

சோனு சைனி ராஜஸ்தானின் கரௌலி மற்றும் தௌசா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள மெஹந்திபூர் பாலாஜி கோவிலுக்குச் சென்றிருந்தபோது ஆர்த்தி தேவியை முதன்முதலில் சந்தித்திருக்கிறார். தொடர்ந்து இருவரும் பேசிவந்த நிலையில், அதே ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.

சோனுவை திருமணம் செய்ய தனது வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் ஆர்த்தி தேவி. மகள் திருமணம் செய்துகொண்டதை அறியாமல் அவரது தந்தை தந்தை சூரஜ் பிரகாஷ் குப்தா இதுகுறித்து காவல்துறையில் புகார் ஒன்றையும் அளித்திருக்கிறார்.


இந்நிலையில், சோனு – ஆர்த்தி தேவி ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு ஆர்த்தி தேவி சோனுவின் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

ஆனால், போலீசில் இதுகுறித்து புகார் அளித்தால் தனக்கு இடையூறு வருமோ என அச்சமடைந்த சோனு அமைதியாக இருந்துவிட்டார். ஆனால், இதுகுறித்து ஆர்த்தி தேவியின் தந்தை சூரஜ் பிரகாஷ் குப்தா மீண்டும் ஒரு புகாரை காவல்துறையில் அளித்திருக்கிறார்.

அப்போது, அடையாளம் தெரியாத இளம்பெண் சடலம் ஒன்றையும் காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கின்றனர். அது தனது மகள் ஆர்த்தி தான் என கோபால் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து, சோனு மற்றும் அவரது நண்பர் பிரகாஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதில் சோனு மற்றும் அவரது நண்பருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 18 மாதங்கள் சிறையில் இருந்த சோனு மற்றும் அவரது நண்பர் பிரகாஷ்க்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுத்திருக்கிறது.

இதனையடுத்து வெளியே வந்த சோனு தனது மனைவியை தேட துவங்கியிருக்கிறார். அப்போதுதான், ஆர்த்தி தேவி ராஜஸ்தான் மாநிலத்தில் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு வசித்து வருவது அவருக்கு தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து இதுகுறித்து போலீசில் தெரிவித்திருக்கிறார் சோனு. பின்னர், ஆர்த்தியை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரண்டு வெவ்வேறு பிறந்த நாளை கொண்ட ஆதார் கார்டை அவர் வைத்திருந்தது தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மனைவியை கொலை செய்ததாக கணவர் கைது செய்யப்பட்ட நிலையில் 6 வருடம் கழித்து மனைவி வேறு ஒருவருடன் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.