மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு… பேராசிரியர் கைது.. நடந்தது என்ன?

344

மூகாம்பிகை…

மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் பாலியல் தொல்லை, மன ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக பேராசிரியர் பரமசிவம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் சுகிர்தா (27). இவர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் (MD) அனஸ்தீசியா படித்து வந்தார்.

கல்லூரி வளாகத்திலுள்ள விடுதியில் தங்கி பயின்று வந்தார். கடந்த 6ம் தேதி கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். இதனை அறிந்த சக மாணவிகள் விடுதிக்கு சென்றுள்ளனர்.


அப்போது சுகிர்தா இருந்த அறை உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதுகுறித்து மாணவியர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி சுகிர்தா இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடல் தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்தை தனக்குத் தானே ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுகிர்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அவரது அறையை சோதனையிட்ட போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், பரமசிவன் என்ற பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், டாக்டர் ஹரீஷ் என்ற சீனியர் மாணவர், டாக்டர் பிரீத்தி என்ற சீனியர் மாணவி ஆகியோர் மனதளவில் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், குற்றம்சாட்ட 3 பேர் இதுவரை கைது செய்யப்படாததது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அரசியல் தலைவர் கூறிவந்தனர்.

இந்நிலையில், குற்றம்சாட்டிய பேராசிரியர் பரமசிவம் மற்றும் சீனியர் மாணவர்கள் பிரீத்தி, ஹரிஷ் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் மாணவர் ஹரிஷை போலீசார் தேடி வரும் நிலையில் மாணவி பிரீத்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.