
தமிழகத்தில் தற்கொலை செய்த மாணவி உடல் எரிக்கப்பட்ட மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியின்மேட்டுநன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் நித்ய ஸ்ரீ சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் ஒரே ஸ்மார்ட் ஃபோன் மட்டும் இருப்பதாக கூறப்படும் நிலையில் மாணவிக்கும், அவரது இரு சகோதரிகளுக்கும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில் ஏற்பட்ட பிரச்னையே இதற்கு காரணம் என உறவினர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

இதனையடுத்து அக்கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் எரியூட்டப்பட்டது.
ஆனால் நித்யஸ்ரீ எரியூட்டப்பட்ட இடத்தில் தற்போது கூடுதல் மனித எலும்புகள், கைக்கடிகாரம், செல்போன் உதிரி பாகங்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்வலையை கிளப்பியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் எலும்புகளை தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் அங்கு ஆய்வு செய்து பொருட்களை சேகரித்தனர்.
இதனிடையே, மேட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது மகன் ராமுவை காணவில்லை என அண்மையில் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இளைஞர் ராமு தற்கொலை செய்துகொண்ட மாணவி நித்யஸ்ரீயை ஒருதலையாக காதலித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறும் போது நித்யஸ்ரீ உடல் எரியூட்டப்பட்ட நாளன்று இரவில் இடுகாட்டு பகுதியில் ராமு சுற்றி திரிந்துள்ளான். அனைவரும் சென்றபின்னர் இரவில் இளைஞர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாகவும் அப்பகுதியினர் கூறினர். எனவே ஒருதலை காதலாக இருந்தாலும் இளம்பெண் இறப்பை ஏற்க முடியாமல் மாணவி உடல் எரிந்துகொண்டிருக்கும் போதே அதில் பாய்ந்து இளைஞர் ராமு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேநேரத்தில் மாணவியின் வீட்டில் நான்கு ஸ்மார்ட்ஃபோன்கள் இருக்கிறது. எனவே மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.















