பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்ப கூடாது என்று பேட்டி அளித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவர் உயிரிழந்தார்.
தாக்குதல் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரும், இவரது மனைவியும் தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மனைவி கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த வினய் நர்வாலின் 27 -வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் பங்கேற்ற அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அவர் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முழு தேசமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
நாம் எந்த சமூகத்தின் மீதும் கோபத்தை திருப்ப கூடாது. முஸ்லீம்களுக்கு எதிராக மக்கள் திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும். அவரின் மரணத்திற்கு நீதி வேண்டும்” என்று கண்ணீர் மல்க பேசினார்.