கர்நாடகா..

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் கடந்த 13-ம் தேதி இரவு பையப்பனஹள்ளி ரயில்வே ஸ்டேஷனில், பிளாஸ்டிக் டிரம்மில் கொலைசெய்யப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலத்தை ரயில்வே போலீஸார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில், கொலைசெய்யப்பட்டது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தமன்னா (27) என்பது முதற்கட்டமாக தெரியவந்தது.

இந்தக் கொலைச் சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து ரயில்வே போலீஸாரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ‘‘தமன்னா சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரில் அப்ரோஸ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.

அப்ரோஸுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அப்ரோஸின் நெருங்கிய உறவினரான இந்திகாப் என்ற இளைஞரைக் காதலித்துவந்திருக்கிறார். அப்ரோஸிடம் விவாகரத்து பெற்று இந்திகாப்பைத் திருமணம் செய்த தமன்னா, பெங்களூரில் வசித்துவந்திருக்கிறார்.

இந்தத் திருமணத்துக்கு தமன்னாவின் சகோதரர் நவாப் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், இந்திகாப்பின் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துவந்திருக்கின்றனர். இப்படியான நிலையில், அப்ரோஸின் வாழ்க்கையை, தமன்னா நாசம் செய்ததாகக் கருதிய நவாப், தமன்னாவைக் கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார்.

கடந்த 12-ம் தேதி சமாதானம் பேசுவதாக தமன்னா, இந்திகாப் இருவரையும் அழைத்த நவாப், தனது வீட்டில் உறவினர்கள் ஏழு பேருடன் இணைந்து, ‘தமன்னாவுடன் இனி வாழ வேண்டாம், தமன்னாவை பீகாருக்கு அனுப்பிவைக்கிறோம்’ எனக் கூறி, இந்திகாப்பை வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.

இந்திகாப் அங்கிருந்து சென்ற நிலையில், தமன்னாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நவாப், திடீரென அவரைக் கடுமையாகத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார். இதையடுத்து உறவினர்களுடன் சேர்ந்து, நீல நிற டிரம்மில் தமன்னா உடலை வைத்து,

ஆட்டோவில் கொண்டுசென்று பையப்பனஹள்ளி ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் அருகே டிரம்மை வீசிவிட்டுத் தப்பியிருக்கிறார். சிசிடிவி காட்சிகள், ஆட்டோ எண்ணை வைத்து முதற்கட்டமாக மூன்று குற்றவாளிகளைக் கைதுசெய்திருக்கிறோம்’’ என்றனர்.

இதேபோல், கடந்த டிசம்பர் 6-ம் தேதி பெங்களூரில் அழுகிய நிலையில் டிரம்மில் பெண் சடலத்தை ரயில்வே போலீஸார் கண்டறிந்தனர், கடந்த ஜனவரி 4-ம் தேதி பெங்களூர் யஸ்வந்த்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை இரண்டு பெண்களும் யார் எனக் கண்டறியப்படாமல் இருக்கிறது.

இப்படியான நிலையில், பெண்கள் கொலைசெய்யப்பட்டு டிரம்மில் வைத்து வீசப்படுவது, Serial killier சம்பவங்களைப்போல தொடர்ந்து அரங்கேறுவதாகவும், கர்நாடகத்தில் சட்டம் – ஒழுங்கு தோற்றுவிட்டதாகவும், ஹரியானா காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜ்வாலா ட்விட்டரில் கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.

காங்கிரஸின் குற்றச்சாட்டு, இந்தச் சம்பவம் குறித்த கேள்விகளுடன் நாம், பெங்களூரு ரயில்வே போலீஸ் எஸ்.பி செளவுமிய லதாவை போனில் தொடர்புகொண்டபோது, ‘‘குடும்ப விவகாரம் தொடர்பாகத்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது.

முதற்கட்டமாக, மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ள, ஐந்து பேரைக் கைதுசெய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. Serial Killer எனச் சொல்லும் வகையில், இந்த வழக்குக்கும் மற்ற வழக்குகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. முன்பு கைப்பற்றப்பட்ட பெண்களின் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இது குறித்தான விசாரணையும் நடக்கிறது’’ என்றார் விரிவாக.















