மும்பை..

மும்பை அருகில் நாலாசோபாரா பகுதியிலுள்ள விஜய் நகர் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வந்துகொண்டிருந்தது. உடனே பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்துவந்து வீட்டுக்கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது படுக்கையறையில் கட்டிலின் அடியிலிருந்த காலி இடத்தில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை யாரோ கொலைசெய்து உள்ளே வைத்திருக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன்பே கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்த போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர்.

விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் மேகா ஷா (37) என்று தெரியவந்தது. அந்தப் பெண்ணும் ஹர்திக் ஷா என்பவரும் திருமணம் செய்துகொள்ளாமல் (லிவ்-இன் ரிலேஷன்ஷிப்) சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதில் மேகா நர்ஸாகப் பணியாற்றிவந்தார்.

ஆனால், ஹர்திக் ஷா வேலை இல்லாமல் இருந்தார். வீட்டுச்செலவை மேகாதான் கவனித்துக்கொண்டார். இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

ஹர்திக் வீட்டிலிருந்த சில மரச்சாமான்களை விற்பனை செய்துவிட்டு, அதில் கிடைத்த பணத்துடன் தப்பிச் சென்றிருந்தார். அவரின் மொபைல் போன் மூலம் அவர் எங்கு இருக்கிறார் என்பதை போலீஸார் கண்காணித்தனர்.

இதில் ஹர்திக் ரயில் மூலம் தப்பிச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். ரயில் மத்தியப் பிரதேச மாநிலம் நாக்டா என்ற இடத்தில் சென்றபோது ரயிலில் சோதனை நடத்தி ஹர்திக்கை போலீஸார் கைதுசெய்து மும்பைக்கு அழைத்துவந்தனர்.

அவரிடம் விசாரித்தபோது இருவருக்குமிடையே செலவைப் பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட தகராறில் மேகாவைக் கொலைசெய்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக நட்பில் இருந்திருக்கின்றனர். ஆறு மாதத்துக்கு முன்புதான் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். தற்போது கொலை நடந்த வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் வாடகைக்குக் குடிவந்திருந்தனர்” என்பதும் தெரியவந்தது.















