ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி.. மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்!!

391

நாமக்கல்லில்..

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி கலையரசி மற்றும் அவரது குடும்பத்தினரும் நாமக்கல் – பரமத்தி சாலையிலுள்ள ஐவின்ஸ் உணவகத்தில் நேற்று முன் தினம் மாலை சாப்பிட்டுள்ளனர். இதில், கலையரசி ஷவர்மா வேண்டும் என விரும்பிக் கேட்டு சாப்பிட்டுள்ளார்.

இதேபோல, நாமக்கல் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனது பிறந்தநாளையொட்டி நண்பர்களுக்கு இதே உணவகத்தில் பார்ட்டி வைத்துள்ளார். ஷவர்மாவையும், சிக்கன் ரைஸையும் ஆர்டர் செய்து மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் உணவகத்தில் சாப்பிட்ட கலையரசி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், 13 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் நேற்று காலை அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சிறுமி மற்றும் குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையிலும், மாணவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் உமா, மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகியோர் பாதிகப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

உடல்நலக்குறைவுக்கு புட் பாய்சன் ஆனதே காரணம் என தெரியவந்த நிலையில், அதுகுறித்து விசாரிக்கப்பட்டது. அப்போதுதான், தனியார் உணவகத்தில் ஷவர்மா, சிக்கன் ரைஸ் சாப்பிட்டதை மாணவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, தனியார் உணவகத்துக்கு நேரடியாக சென்று விசாரித்த ஆட்சியர் உமா, மாணவர்கள் என்ன சாப்பிட்டனர் என்று கேட்டதோடு சமையல் கூடத்தையும் பார்வையிட்டார்.

அங்கு சமையல் செய்ய கெட்டுப் போன இறைச்சியை வைத்திருந்ததும், ஷவர்மா செய்ய பயன்படுத்தும் இயந்திரம் அசுத்தமாக இருந்ததும் தெரியவரவே, டென்ஷனான ஆட்சியர் உணவகத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, கெட்டு போன இறைச்சி மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்,

கெட்டுபோன இறைச்சியை பினாயில் ஊற்றி அழித்தனர்.இந்த நிலையில் ஷவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த சிறுமி கலையரசி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 6 பேர் வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஷவர்மா சாப்பிட்டு சிறுமி பலியான சம்பவம் நாமக்கல் பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹோட்டல்களில் பயன்படுத்தும் இறைச்சிகள் பல சமயம் கெட்டுபோய் இருப்பதாகவும், இது தெரியாமல் மக்கள் சாப்பிடுவதால் பல உடல்நலக் கோளாறுகளுடன் அவதிப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும், உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு சுத்தமாக இருப்பதை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளன.