உத்தரப் பிரதேசத்தில்..

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு விதம். கர்ப்ப காலத்தில் வீட்டின் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனைக்கு சென்று வந்துள்ளார் அந்த பெண். ஸ்கேனில் இரட்டை குழந்தை இருப்பதாக கூறிய நிலையில், பிரசவத்தில் ஒரு குழந்தை மட்டுமே பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் வசிப்பவர் அனுப் குமார். இவரது மனைவி கர்ப்பமான நிலையில், வழக்கமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. மனைவிக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில், கர்ப்பத்தில் இரட்டை குழந்தைகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு மகிழ்ச்சியடைந்த உறவினர்கள், தொடர்ந்து கர்ப்பிணியை நன்றாக கவனித்து வந்துள்ளனர். வேறொரு ஸ்கேன் செண்டரிலும் இரட்டை குழந்தைகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இரட்டைக் குழந்தைகள் என உறவினர்கள், நண்பர்களிடம் எல்லாம் சந்தோஷத்தைப் பகிர்ந்து மகிழ்ச்சியாக இருந்த அனுப்குமாருக்கும், உறவினர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
கடந்த வாரம் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, வழக்கமாக செல்லும் தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். பிரசவம் நடைபெற்ற நிலையில், ஆர்வத்துடன் காத்திருந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி செய்தி வந்தது.

பிரசவத்தில் ஒரு குழந்தைதான் பிறந்தது, பெண்ணின் கருவில் ஒரு குழந்தைதான் இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் பரிசோதனையில் இரட்டை குழந்தை எனக் கூறப்பட்ட நிலையில்,
எப்படி ஒரு குழந்தை தான் இருக்கும் என கேள்வி எழுப்ப தொடங்கினர். ஒரு குழந்தையை மருத்துவமனை திருடிவிட்டது என புகார் கூறி போராட்டம் செய்துள்ளனர்.

தொடர்ந்து இவர்களை மருத்துவமனை நிர்வாகம் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவர் அனுப் குமார் இந்த விவகாரம் குறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்தி குற்றம் நடந்திருந்தால் உரிய நீதி வழங்கப்படும் என அதிகாரி உறுதி அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















