ஹீரோவாக நினைத்த கணவன்.. ஒரே வீடியோவில் ஜீரோவாக்கிய மனைவி!!

4957

சென்னை….

சென்னை எண்ணூர் சின்னகாசி கோயில் குப்பத்தைச் சேர்ந்தவர் பாலன். 56 வயதான இவர், முழுநேர போதை ஆசாமி. தலைவர் போதையை போட்டால் , அந்த ஏரியாவே அவருக்கு கட்டுப்பட்டதாக நினைத்து கலவரத்தில் இறங்குவாராம்.

பாலனின் மனைவியான 54 வயது ஆராயி, காசிமேடு கல்மண்டபம் மீன் மார்க்கெட்டில் கருவாடு வியாபாரம் செய்து வருகிறார். குடிகார கணவனிடமிருந்து குடும்பத்தை காக்க, பல ஆண்டுகளாக அவர் அந்த தொழிலை செய்து வருகிறார்.

தலைவர் பாலன், போதையை போட்டால் நேராக காசி மேடு மீன் மார்க்கெட் வந்து, மனைவி ஆராயிடம் அலும்பு செய்வது வழக்கமாம். போதாக்குறைக்கு அங்குள்ள மற்ற கடைக்காரர்களிடமும் சேட்டை செய்து களேபரம் செய்வாராம்.


இந்நிலையில் தான் சம்பவத்தன்று முழு போதையில் மார்க்கெட் வந்த பாலன், ஆராயிடம் தகராறு செய்துள்ளார். வியாபாரம் நடக்கும் இடத்தில் பாலன் செய்த அத்துமீறல், பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது அங்கு மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த பாலனின் அத்தை மகளான 50 வயது சத்யா, ‘ஏன் மாமா.. இப்படியெல்லாம் பண்ற, பேசாமா வீட்டுக்கு போ’ என்று கூறியுள்ளார்.

‘அத்தை மகளா இருந்தா ஒத்தையா வந்து கேட்பீயா?’ என்று கடுப்பான பாலன், சத்யாவை சாத்து சாத்து என்று சாத்தியுள்ளார். தனக்கு நியாயம் கேட்க வந்த சத்யாவை கணவன் அடிப்பதை பார்த்த மனைவி ஆராயி, தன்னுடைய மொபைல் போனில், பாலன் தாக்கும் காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார்.

அதன் பின் அந்த வீடியோக்களை வாட்ஸ் ஆப் மூலம் பரப்பிய ஆராயி, ‘இந்த கொடுமைக்கு ஒரு நியாயம் சொல்லுங்க’ என முறையிட்டுள்ளார். அதுக்கு மேல சொல்லவேண்டுமா? பாலனின் வீடியோ வைரல் ஆனது.

 ராயபுரம் போலீசார் பார்வையிலும் அது பட, பாலன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். 54 வயது மனைவி, தன் கணவரை தொழில்நுட்பம் மூலம் பழிதீர்த்த சம்பவம், காசிமேடு பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.