மயிலாடுதுறையில்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவரை காணவில்லை. அதாவது பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 11ம் தேதி மாயமாகினார்.
இதனை அடுத்து அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பதறிப் போன மாணவியின் பெற்றோர், இது குறித்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். தொடர் விசாரணையில் இளைஞர் ஒருவர் சீர்காழியில் கடத்தி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் நெல்லையை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்ற இளைஞர், ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்தியது தெரிய வந்துள்ளது.

மேலும், சதீஷ்குமார் ஸ்னாப் ஷாட் ( snapchat ) ஆப் மூலம் மாணவியிடம் பழகியுள்ளார். தொடர்ந்து குறுஞ்செய்தி, செல்போனில் பேச்சு பின்னர் நேரில் சந்திப்பு என இவர்களின் பழக்கம் வளர்ந்தது.
பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இளைஞரிடம் இருந்து மீட்கப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு மனநல ஆலோசனை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சமூக வலைதளங்களின் மூலம் பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சமூக வலைதள பயன்பாடு, பெண்கள் மீதான பார்வை குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனவே சமூக வலைதளம் பயன்படுத்தினாலும், புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குறிப்பாக பள்ளி மாணவிகள் எச்சரிக்கையுடன் அனுவது சிறந்தது என்று கூறுகின்றனர்.















