சிதம்பரம்..

தமிழகத்தின் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் மணல்மேட்டு தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ்.

இவரது மகன் மணிகண்டன், 7ம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த 20ம் தேதி மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளான்.

அங்கு திருவிழா முடிந்து பல மணிநேரமாகியும் மணிகண்டன் வீட்டுக்கு வராததால், குடும்பத்தினர் தேடி அலைந்துள்ளனர். அப்போது தான் அருகில் உள்ள குளத்தில் மணிகண்டன் பிணமாக கிடந்தது தெரியவந்தது, உடனடியாக அவனை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முடிவில், கழுத்தை நெறித்து மணிகண்டனை யாரோ கொலை செய்தது கண்டறியப்பட்டது, யார் இதை செய்திருப்பார்? என்ன காரணம்? என பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவன் ராகுல் குற்றவாளி என கண்டறியப்பட்டது.

மணிகண்டன் அடிக்கடி பாட்டி வீட்டுக்கு வரும் போது ராகுல் அறிமுகமாகியுள்ளார், இருவரும் நன்றாக பழகி வந்த நிலையில், மணிகண்டன் தனது தோழனிடம் ராகுலின் சகோதரியை குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த ராகுல், மணிகண்டனை கொலை செய்த திட்டமிட்டார், இதன்படி சம்பவதினத்தன்று தனியாக இருந்த மணிகண்டனை தன்னுடன் வருமாறு அழைத்து சென்று கழுத்தை நெறித்து குளத்தில் மூழ்கடித்து கொன்றுள்ளார்.

இதனைதொடர்ந்து ராகுலை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















